ஓமலூர் அருகே காமலாபுரம் அரசு மதுகடை பாரில் இரு தரப்பு ரவுடிகள் ஒருவரை ஒருவர் தாக்குதல் நடத்தி, வாகனங்களை உடைத்து மக்களை அச்சுறுத்திய நிலையில் போலீசார் ரவுடிகளை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் ஒரு கடையில் பார் அனுமதி பெற்றுள்ளதாக கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பார் நடத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் நடத்தப்பட்ட பார் உரிமம் இல்லாமல் பார் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பார் நடத்தியவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், மீண்டும் பார் ஏலம் எடுத்திருப்பதாக கூறி ஒரு மாதமாக பார் நடத்தப்படுகிறது. ஒரு கடைக்கு பார் எடுத்ததாக கூறி இரண்டு கடைகளுக்கும் சேர்த்து நடத்தி வருகின்றனர். மேலும், இரண்டு மதுக்கடையின் வழிகளையும் அடைத்துவிட்டு, பார் வழியாக செல்ல வேண்டுமென வழி ஏற்படுத்தியுள்ளனர். ஏற்கனவே அரசு மதுபான கடையின் மெயின் கேட்டை அடைத்ததாக பல்வேறு புகார்கள் இருந்த நிலையில், மீண்டும் டாஸ்மாக் கடைகளின் பிரதான பாதைகளை அடைத்து வைத்துள்ளனர். பார் உரிமையாளர் பாதையை அடைத்ததால் அரசுக்கு லட்சம் கணக்கில் இழப்பு ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதைத்தொடர்ந்து மது குடிக்க வந்த இரண்டு ரவுடி கோஷ்டிகள், பாதை அடைக்கப்பட்டது தொடர்பாக பாரிலேயே ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். தொடர்ந்து இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு அங்கிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்த தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், அங்கிருந்து ரவுடிகள் தப்பியோடினர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மது பாரில் மோதிக்கொண்ட ரவுடிகள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், அவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் எனவும், இவர்களை போலீசார் தேடி வருவதும் தெரியவந்துள்ளது. காமலாபுரம் டாஸ்மாக் பாரில் தகராறில் ஈடுபட்ட இருதரப்பு ரவுடிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் பாரில் ரவுடிகளை அனுமதித்து தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பார் உரிமையாளர் பாருக்கான உரிமத்தை காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டுமென காவல்துறையினர் பார் ஊழியர்களிடம் எச்சரித்து சென்றனர். தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பு பார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரில் தாக்குதல் நடத்திய ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM