கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வர உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையானது.
கைது நடவடிக்கை
பள்ளிக்குள் நுழைந்தவர்கள் வாகனங்களை அடித்து நொறுங்கி தீவைத்தனர். மேலும் சான்றிழழ்களை சூறையாடினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரித்து கலவரம் தொடர்பாக ஏராளமானவர்களை கைது செய்தனர். மேலும் மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகள்
கலவரத்தின் போது சேதமடைந்த பள்ளி சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் அனுமதி அளித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக ஏற்கனவே 2 ஆண்டுகள் வரை ஆன்லைன் வகுப்புகள் நடந்த நிலையில் தற்போதைய கலவரத்தால் அந்த பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தற்போதும் நடக்கிறது.
பிற பள்ளியில் சேர்க்க..
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மாணவிகளின் கல்வியை பாதிக்கும் என கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பெற்றோர்கள் விரும்பினால் அருகில் உள்ள பள்ளிகளில் அந்த மாணவர்களை சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் கருத்துகளை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பொதுநல மனுத்தாக்கல்
இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்எல் ரவி என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், ‛‛வன்முறைக்கு உள்ளான பள்ளியில் படித்த குழந்தைகளை பிற பள்ளிகளில் சேர்க்க மறுக்கின்றனர். இதனால் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும்” என்பன போன்ற விபரங்கள் உள்ளன. இந்த மனு அடுத்தவாரம் விசாரணை வர உள்ளது.