வேலூர்: வட தமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு, கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி 93 கி.மீ. பயணித்து, ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் வயலூரில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் வறண்ட நதியாக ஆண்டுக்கு ஒருமுறை விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் மட்டுமே பாலாற்றில் வெள்ளத்தைக் காண முடியும் என்ற நிலைமாறி கடந்த ஓராண்டாக பாலாறு வற்றாத ஜீவநதியாக மாறி மக்கள் மனதை குளிர்வித்து வருகிறது.
மக்களின் குடிநீர் தேவையும், விவசாயமும் நம்பியுள்ள பாலாறு மெல்ல மெல்ல பாழாகி வருகிறது. தோல் கழிவும், ரசாயனக் கழிவும் பாலாற்றையொட்டியுள்ள மண்ணை மலடாக்கி முப்போகம் விளைந்த பூமி, விவசாயப் பணிக்கு பயனில்லாமல் மாறிவிட்டது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் விருதும், சிறந்த மாநகராட்சிக்கான தமிழக அரசின் விருதையும் பெற்ற வேலூர் மாநகராட்சியில் குப்பையை பாலாற்றில் கொட்டி தீயிட்டு எரிப்பதும், பள்ளம் தோண்டி புதைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மாநகராட்சி அலட்சியம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பாலாற்றின் கரையோரத்தில் மாநகராட்சி நீரேற்றும் நிலையம் அருகில் குப்பையை தரம் பிரித்து எருவாக்கும் கிடங்கில் மலைபோல் தேங்கியுள்ள குப்பை ஆற்றை பாழாக்கி வருவதுடன் பள்ளம் தோண்டி புதைத்து வருவதைக் காணும்போது, விருது பெற்ற மாநகராட்சி நிர்வாகமா? இப்படி செய்கிறது என்ற கேள்வி எழுகிறது.
வேலூர் மாநகரில் இருந்து நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் குப்பை கலந்த கழிவுநீர் பாலாற்றில் கலப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி தகவலைத் தெரிவிக்கின்றனர். மாற்று தீர்வாக கருதப்படும் பாதாள சாக்கடை திட்டமும் தொகுதி-1 தொடங்கி தொகுதி-4 என நீண்டு வருகிறது. ஆனால், முடிந்தபாடில்லை.
‘ஆறும், கடலும் என்ன குப்பைத் தொட்டியா’ என்று கேள்வி எழுப்பும் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், ‘‘ஆறு என்பது தண்ணீர் செல்லத்தான். ஆற்றில் இவ்வளவு கழிவுநீர் கலப்பதால் குடிநீருக்காக நம்பியுள்ள நமக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் நிலத்தடி நீரும் மாசுபடும். கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கும். அதை சாப்பிடும் நமக்கு ஊட்டச்சத்து பாதிப்பு ஏற்படும்.
நமக்குள் ஒரு விஷயத்தை மூடத்தனமாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அது, அரசும் அரசு நிறுவனமும் தவறு செய்ய மாட்டார்கள் என்று. அப்படி எதுவும் கிடையாது. உதாரணமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறு செய்யாமல் இருந்திருந்தால் கூவம், அடையாறு ஆறு எப்படி மோசமாகி இருக்கும். அவர்கள் கண்காணித்து தண்டித்திருந்தால் இப்படி மாறியிருக்காது’’ என அழுத்தமாக தெரிவித்தார்.
இதுகுறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் கேட்டதற்கு, ‘‘வேலூர் மாநகராட்சியில் 11 இடங்களில் 20 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பை தேங்கியுள்ளது. இவற்றை பயோமைனிங் முறையில் பிரித்தெடுக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத கழிவுகளை எரிக்க நவீன எரியூட்டி மையத்தை நிறுவ உள்ளோம். அனுமதி கிடைத்ததும் எரியூட்டி மையம் நிறுவப்படும். பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளைப் பொறுத்தவரை, தொகுதி 2-ல் 32 கி.மீ தொலைவு பணிகள், தொகுதி 3-ல் 53 கி.மீ பணிகள் பாக்கியுள்ளன.
சர்க்கார் தோப்பு பகுதியில் 50 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் 90% முடிந்துள்ளது. இதற்காக, பாலாற்றின் குறுக்கே கால்வாய் கட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அனுமதி கேட்டுள்ளோம். கால்வாயில் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் பொறுப்பும் கடமையும் மக்களுக்கும் இருக்க வேண்டும்’’ என்றார்.
இந்த நிலை வேலூரில் மட்டுமல்ல, வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டையிலும் அப்பட்டமாக மீறப்படுகிறது. பாலாற்றில் குப்பை கொட்டுவது, ஆறுபோல் கழிவு நீர் கலப்பது, தோல் மற்றும் ரசாயன கழிவுகள் கலப்பதால் நிலமும், வளமும் நஞ்சாவதை தடுக்கவேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மவுனமாக வேடிக்கை பார்ப்பது, சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.