புதுடில்லி :திட, திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை சரிவர செயல்படுத்தாத பஞ்சாப் அரசுக்கு, ௨,௦௦௦ கோடி ரூபாய் அபராதம் விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கழிவுநீர் மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது.
இது குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான ‘பெஞ்ச்’ உத்தரவிட்டிருப்பதாவது:மாசு கட்டுப்பாட்டுக்கான விரிவான திட்டத்தை உருவாக்குவது, மாநில அரசின் கடமையாகும். இதற்கு, நிதி பற்றாக் குறை இருந்தால், அதற்கான வளங்களை பெருக்குவது அல்லது செலவினங்களை குறைப்பதற்கான திட்டங்களை, மாநில அரசு மட்டுமே செயல்படுத்த முடியும். சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப, கழிவு மேலாண்மைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
சுகாதாரம் சம்பந்தமான பிரச்னைகளை, நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது. சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என காலவறையற்று காத்திருக்கவும் முடியாது. கழிவு மேலாண்மையில் தோல்வி அடைந்துள்ள பஞ்சாப் அரசு, ஏற்கனவே தீர்ப்பாயத்தில் ‘டிபாசிட்’ செய்துள்ள ௧௦௦ கோடி ரூபாய் போக, மீதம் ௨,௦௮௦ கோடி ரூபாயை இரண்டு மாதத்துக்குள் அபராதமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement