புதுடில்லி :’அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவரை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் சந்தித்துப் பேசியதால், ஆர்.எஸ்.எஸ்., தன் கொள்கையில் இருந்து விலகிச் சென்று விடவில்லை’ என, காங்கிரசுக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், முஸ்லிம் சமூகத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம் அறிஞர்கள், கல்வியாளர்கள் பலரை சந்தித்து பேசி உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பாகவத், புதுடில்லியில் உள்ள அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசியை, புதுடில்லி கஸ்துாரிபா காந்தி மார்க்கில் உள்ள மசூதிக்கு நேற்று முன்தினம் சென்று சந்தித்து பேசினார்.இதை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. ‘ராகுல் நடத்தும் ஒற்றுமை யாத்திரையின் தாக்கம் காரணமாகவே, இமாம் அமைப்பின் தலைவரை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சந்தித்துப் பேசியுள்ளார். ‘ஆர்.எஸ்.எஸ்., தன் கொள்கையில் இருந்து விலகிச் செல்கிறது’ என, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாக குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை காங்கிரஸ் தவறாக புரிந்து வைத்துள்ளது.
இதற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஆர்.எஸ்.எஸ்., கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. எந்த காலத்திலும் ஒரே கொள்கை தான். சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சிறுபான்மை சமூகத்தினருடன் பேச்சு நடத்துவது என்பது, 20 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பால் முன் எடுக்கப் பட்ட ஒரு முயற்சி. அதன் தொடர்ச்சியாகவே இமாம் அமைப்பின் தலைவருடன், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சந்திப்பு நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement