கிரெடிட் கார்டு அல்லது கடன் அட்டை என்பது நுகர்வோரை மையப்படுத்திய தற்போதைய உலகத்தில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படக்கூடியது. சரியாகப் பயன்படுத்தினால் கிரெடிட் கார்டு பயனுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், அதை வாங்கியோர் பலர் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமலும், எப்படிக் கணக்கை முடிப்பது என்று தெரியாமலும் தடுமாறுகிறார்கள்.
கடன் அட்டை வழங்கும் நிறுவனங்களின் கட்டணங்களும், வட்டி விகிதங்களும் பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை. கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் பலர் அது தேவையில்லை என்று முடிவுக்கு வந்தாலும் அதன் கணக்கை முறையாக முடிவுக்குக் கொண்டு வருவதில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் பலர் பயன்படுத்தாத கிரெடிட் கார்டை தொடர்ந்து வைத்து கட்டணங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
“கிரெடிட் கார்டு என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி போன்றது. அதைச் சாதுர்யமாகப் பயன்படுத்தினால் மட்டுமே நன்மை கிடைக்கும்” என்கிறார் பொருளாதார ஆலோசகர் கௌரி ராமச்சந்திரன்.
நாடு முழுவதும் 7.68 கோடி பேர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த மே மாதத்தில் சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக நிறுவனங்களில் கிரெடிட் கார்டு இயந்திரங்கள் மூலமாக செலவு செலவு செய்யப்பட்டிருக்கிறது.
- வீட்டுக் கடன் பெறுவது எப்படி? வட்டியை பேரம் பேசி குறைக்க முடியுமா?
- தவறுதலாக வேறொருவர் கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டால் திரும்பப் பெறுவது எப்படி?
- உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா?
இப்படி நுகர்வு வணிகத்தில் முக்கிய இடம்பிடித்திருக்கும் கிரெடிட் கார்டு தொடர்பான முக்கியமான அம்சங்களைக் கூறுவதுடன், கணக்கை எப்படி முடிப்பது, அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்கும் கட்டுரை இது.
கிரெடிட் கார்ட் தேவையில்லை என்றால் கணக்கை ரத்து செய்து முடிப்பது எப்படி?
ஒரு கிரெடிட் கார்டு தேவையில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டால், அதை பயன்படுத்தாமல் இருப்பது மட்டுமே அந்தக் கணக்கை முடிப்பதற்குப் போதுமானதல்ல.
“கிரெடிட் கார்ட் கணக்கை தற்காலிகமாக முடக்க வேண்டுமா இல்லை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டுமா என்பது முதலில் முடிவு செய்ய வேண்டும்.” என்கிறார் பொருளாதார ஆலோசகர் கௌரி ராமச்சந்திரன்.
கிரெடிட் கார்டை நிரந்தரமாக ரத்து செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனித்தனியாக வழிமுறைகள் உண்டு எனினும் பொதுவான சில நடைமுறைகளைப் பயன்படுத்தலாம்.
“பெரும்பாலான கிரெடிட் கார்டுகளை ரத்து செய்வதற்கு அவற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். கார்டின் பின்புறத்தில் இதற்கான எண் இருக்கும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் ரத்து செய்வதற்கான நடைமுறைகளை விளக்குவார்கள். இல்லையெனில் வாடிக்கையாளர் சேவைக்கான மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி கார்டை ஒப்படைக்கலாம். “
“பெரும்பாலான கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அதன் இணையதளங்களில் இதற்கான விண்ணப்பப் படிவங்களை வைத்திருப்பார்கள். அதை பதிவிறக்கி நிரப்பி தொடர்புடைய நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் கிரெடிட் கார்டை மூலைவிட்டமாக வெட்டி அதைப் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நிரந்தரமாக கணக்கு முடிக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்து கொள்ளும் வரை இதை வைத்திருப்பது நல்லது” என்கிறார் கெளரி ராமச்சந்திரன்.
பயன்படுத்தாத கிரெடிட் கார்டை ஒப்படைத்து முடிக்க வேண்டியது கட்டாயமா?
பயன்படுத்தாத கிரெடிட் கார்டுகளை ரத்து செய்து கணக்கை முடித்துவிடுவதில் நன்மையும் இருக்கிறது, கெடுதலும் இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கிரெடிட் கார்டு கணக்குகளை முடிப்பது தேவையில்லாதது என்பது வழக்கமான பரிந்துரை.
இருப்பினும் எந்த வகையான நன்மையும் தரவில்லை என்றால் ஒரு கிரெடிட் கார்டின் கணக்கை முடித்துவிடலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சிலர் ஏராளமான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவார்கள். அத்தகைய தருணங்களில் சில கிரெடிட் கார்டுகளை ரத்து செய்துவிடுவது நல்லது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
கிரெடிட் கார்டின் ஆண்டுக் கட்டணங்கள், வட்டி விகிதங்கள் போன்றவை ஒப்பீட்டளவில் அதிகம் என்றால் அப்போதும் அதை முடித்து விடுவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
“தேவையில்லாத, பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டை முறைப்படி ரத்து செய்யாவிட்டால் கடன்காரராகவே தொடர்ந்து இருப்போம்” என்கிறார் கௌரி ராமசந்திரன்.
கிரெடிட் கார்ட் கணக்கை முடிப்பதற்கு முன் எதையெல்லாம் பரிசீலிக்க வேண்டும்?
கிரெடிட் கார்டு கணக்கை முடித்து ரத்து செய்வதற்கு முன்னதாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அதன் கடன் நிலுவைத் தொகை முழுவதும் கட்டப்பட்டு விட்டதா என்பதுதான். எனவே கிரெடிட் கார்டை ரத்து செய்யப்போவது பற்றி முடிவு செய்துவிட்டால் முதலில் அதைப் பயன்படுத்துவதை முதலில் நிறுத்திவிட வேண்டும். ஆனால் அது மட்டும்கூடப் போதாது.
“சில நேரங்களில் நாம் கார்டை பயன்படுத்தாமல் இருந்திருப்போம். ஆனால் ஏதாவது கட்டணங்கள் போடப்பட்டிருக்கும். அது மிகக் குறைவான தொகையாக இருந்தாலும் அதை முழுவதுமாகக் கட்டி முடிக்க வேண்டும். ” என்கிறார் கௌரி ராமச் சந்திரன்.
- வயிற்றுப்போக்கு ஏற்படும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது?
- இரும்பை கையில் கொடுத்தால் வலிப்பு நின்று விடுமா?
“சில நேரங்களில் ஸ்டேண்டிங் இன்ஸ்ரக்ஷன் எனப்படும் தானாகப் பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தியிருந்தால் அவற்றை தொடர்புடைய நிறுவனங்கள் மூலமாக ரத்து செய்ய வேண்டும். அடுத்ததாக கிரெடிட் கார்டில் உள்ள அனைத்து ரிவார்ட் பாயிண்டுகளும் பயன்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது இந்த ரிவார்ட் பாயிண்டுகள் வழங்கப்பட்டிருக்கும்.”
ஒருவர் இறந்துவிட்டால் அவரது கிரெடிட் கார்டு கணக்கு முடிந்துவிடுமா?
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால் அவரது கணக்கில் இருக்கும் நிலுவைத் தொகை ரத்து செய்யப்படாது. மாறாக அவரது வாரிசுதாரர் அதைக் கட்ட வேண்டும்.
“கிரெடிட் கார்டு தனிப்பட்ட ஒருவரால் பெறப்பட்டதா அல்லது கூட்டுக் கணக்காகப் பெறப்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். தனி நபராக கிரெடிட் கார்டு வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால் அந்த கார்டை வேறு யாரும் பயன்படுத்துவது சட்டப்படி தவறாகும். இறந்தவரின் கிரெடிட் கார்டை வைத்திருந்தவரின் வாரிசு தாரர் யாரோ அவர் கார்டின் நிலுவைத் தொகைகைக் கட்டிவிட்டு, கார்டை ரத்து செய்ய வேண்டும். கூட்டுக் கணக்காக இருந்தால், இறந்தவரின் இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்துவிட்டு உயிருடன் இருப்பவர் அதைப் பயன்படுத்தலாம். எனினும் அந்த கார்டை ரத்து செய்துவிடுவது நீண்ட கால நோக்கில் நல்லது”
கிரெடிட் கார்ட் நமக்குத் தேவையில்லை என்று எப்போது முடிக்கு வரலாம்?
தற்போதைய சூழலில் பிளாஸ்டிக் பணம் எனப்படும் கார்ட் வழியான பரிவர்த்தனை இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும் சில தருணங்களில் கிரெடிட் கார்டை தவிர்க்கலாம் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
“அதிக வயதாகிவிட்டது, இனி கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, யாரேனும் அதைத் தவறாகப் பயன்படுத்தி விடுவார்கள், இனி எதற்கும் கடன் வாங்கப் போவதில்லை என்ற சூழ்நிலையில் கிரெடிட் கார்ட் தேவையில்லை என்ற முடிவுக்கு வரலாம்” என கெளரி ராமச் சந்திரன் ஆலோசனை வழங்குகிறார்.
கடன் நிலுவை இருக்கும் கிரெடிட் கார்டு கணக்கை முடிக்க முடியுமா?
கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகை இருந்தால் அந்தக் கணக்கை முடிக்க முடியாது. நிலுவைத் தொகை முழுவதுமாகக் கட்டி முடித்தால்தான் கணக்கை முடிக்க முடியும்.
கிரெடிட் கார்டுக்கும் சிபில் ஸ்கோருக்கும் என்ன தொடர்பு?
சிபில் ஸ்கோர் என்பது கடன் பெறும் தகுதியைக் குறிக்கும் எண். 300 முதல் 900 வரையிலான மதிப்பில் இது குறிப்பிடப்படுகிறது. இந்த 300 என்பது குறைந்த தகுதியையும் 900 என்பது சிறந்த தகுதியையும் குறிக்கும். இந்த சிபில் ஸ்கோருக்கும் கிரெடிட் கார்டுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்கிறார் கௌரி ராமச் சந்திரன்
“கிரெடிட் கார்டை பயன்படுத்தி திருப்பிச் செலுத்தும் முறை சிபில் ஸ்கோரை நேரடியாகப் பாதிக்கக் கூடியது. தவணைத் தேதிக்கு முன்பாகவே முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்தி வந்தால் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும். சிலர் கார்டை வைத்திருந்தும் பயன்படுத்தாமல் இருந்தால் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். “
கிரெடிட் கார்டில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன?
கிரெடிட் கார்டை வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் செய்யக்கூடாத தவறுகள் என கௌரி ராமச்சந்திரன் பரிந்துரைப்பவை:
- ஒரே சமயத்தில் 2 முதல் 3 கிரெடிட் கார்டுகள் வைத்துக் கொள்ளக்கூடாது.
- தவறான வகையைச் சேர்ந்த கிரெடிட் கார்டுகளை வாங்கக் கூடாது. சலுகைகள் தருவதாகக் கூறி வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளை முழுமையாகப் புரிந்து கொண்டுதான் வாங்க வேண்டும்.
- குறைந்தபட்ச தவணைத் தொகையைக் கட்டிவிட்டு மீதியை தவணையில் கட்டுவது தவறு. ஏனெனில் மீது தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி போடப்படும். இது நீண்டகாலக் கடன்பொறியில் சிக்குவதற்கு வாய்ப்பாகும்.
- கிரெடிட் கார்ட் அறிக்கையை கண்டிப்பாக படித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
- திருப்பிச் செலுத்த முடியாது என்று தெரிந்த பொருளை கிரெடிட் கார்டில் வாங்கக் கூடாது.
- கிரெடிட் கார்ட் மூலமாக பணம் எடுப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
- கிரெடிட் கார்ட் உச்சவரம்பை தாண்டி பயன்படுத்தினால் கூடுதல் வட்டி போடப்படும். அதனால் அப்படிச் செய்வது தவறு.
கிரெடிட் கார்டை யாரெல்லாம் வாங்கவே கூடாது?
கிரெடிட் கார்டு மூலமாக கடன் பொறியில் சிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
“ஏற்கெனவே கடன் சுமை அதிகமாக இருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக கிரெடிட் கார்டு வைத்துக் கொள்ளக்கூடாது. இயல்பாகவே அதிகமாக பொருள்களை வாங்கும் குணம் கொண்டவர்கள், கிரெடிட் கார்டு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி புரிந்து கொள்ள முடியாதவர்கள், நிதி ஒழுங்கு இல்லாதவர்கள் ஆகியோரும் கிரெடிட் கார்டை வைத்துக் கொள்ளக்கூடாது.” என்கிறார் கௌரி ராமச்சந்திரன்.
கிரெடிட் கார்டில் ஒரு மாதம் பணம் செலுத்தாவிட்டால் என்னவாகும்?
கிரெடிட் கார்டில் ஒரு மாதம் பணம் செலுத்தாமல் விட்டால் அது சிபில் ஸ்கோரை பாதிக்கும் என்கிறார் கௌரி ராமச்சந்திரன். ஒரு கட்டத்துக்கு மேல் மோசடியாகக் கருதப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என்கிறார் அவர்.
“நிலுவைத் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும் என்பதால் அது மிகப்பெரிய கடன்பொறியாக மாறிவிடும். கடன் நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால், திரும்பி வரும்போது வங்கிக் கணக்கை முடக்கி அதல் இருந்து நிலுவைத் தொகையை வட்டி மற்றும் கட்டணங்களுடன் வசூலிக்கும் நிலையும் ஏற்படலாம்.”
https://www.youtube.com/watch?v=JxGS_x8G24s
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்