புதுடெல்லி: கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ட்ரோன்கள் மூலம் ஆய்வு நடத்தினார்.
உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்களின் மேம்பாட்டில் பிரதமர் மோடி அக்கறை காட்டி வருகிறார்.
அவரின் முயற்சியால் கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கேதார்நாத் கோயிலில் மருத்துவமனை, புதிய பாலம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன. பத்ரிநாத் கோயிலில் “பத்ரிநாத் மாஸ்டர் பிளான்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு புதிய அருங்காட்சியகம், ஆன்மிக நகரம் கட்டப்படுகிறது.
இந்த பின்னணியில் கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களின் மேம்பாட்டு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி ட்ரோன்கள் மூலம் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநில தலைமைச் செயலாளர் சாந்து ஆகியோர் காணொலி வாயிலாக திட்டப் பணிகளின் நிலை குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
“கேதார்நாத்தில் 2-ம் கட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ரூ.188 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. 21 திட்டங்களில் 3 திட்டங்கள் நிறைவு பெற்றுவிட்டன. 6 திட்டங்கள் வரும் டிசம்பரில் நிறைவுபெறும். மீதமுள்ள 12 திட்டங்கள் அடுத்த ஆண்டு ஜூலையில் நிறைவு பெறும்” என்று தலைமைச் செயலாளர் சாந்து தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளிடம் கூறும்போது, “வரும் காலத்தில் கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு வளர்ச்சி திட்டங்களை செம்மையாக செயல்படுத்த வேண்டும். இரு புனித தலங்கள் மட்டுமன்றி, சுற்றியுள்ள பகுதிகளையும் மேம்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.