சென்னை: என்ஐஏ அதிகாரிகளின் சோதனை மற்றும் கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலியாக, சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகம், பாஜக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் சுமார் 93 இடங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு அந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிந்தாதரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.