தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று (செப்.23) இரவு மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை நகர் பகுதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய புறநகர் பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. ஒரே நாளில் ஏழு இடங்களில் நடைபெற்றதால், கோவை மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒப்பணக்கார வீதி, குனியமுத்தூர், டவுன்ஹால், காந்திபுரம், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளை கண்காணித்தார். மேலும் இதைத் தொடர்ந்து கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை , கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கபடுகின்றன. துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்களின் பெயர், வாகன எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோன்று சூலூர், சிந்தாமணிபுதூர் பகுதிகளிலும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil