சமயநல்லூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சம்பந்தமில்லாத இடத்தில் நிழற்குடை: வெயில், மழைக்கு பயணிகள் அவதி

வாடிப்பட்டி: சமயநல்லூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் பேருந்து நிறுத்தத்திற்கு சம்பந்தமில்லாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சமயநல்லூர் முதல் திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை முழுவதும் கொடைரோடு அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும் நான்கு வழிச்சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும், அக்கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்குடையும் இருந்தன. ஆனால் நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் போது, இந்த பயணிகள் நிழற்குடை எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. அதற்கு பதிலாக டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில் புதிதாக பயணிகள் நிழற்குடை குடிநீர் வசதியுடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, அவ்வாறு குடிநீர் வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடையும் அமைக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல், சம்பந்தமே இல்லாத பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

குறிப்பாக சமயநல்லூர் முதல் பாண்டியராஜபுரம் வரை ஆண்டிபட்டி பங்களா, ஆண்டிபட்டி, வடுகபட்டி, தனிச்சியம், அய்யங்கோட்டை, நகரி, திருவாலவாயநல்லூர் பிரிவு என ஏனைய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்  நாள்தோறும் அரசுப் பேருந்துகள் மூலம் பயணிக்கும் நிலையில் உரிய பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் மழையிலும், வெயிலிலும் திறந்த வெளியில் காத்திருந்து  பயணித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் டோல்கேட் நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பயணிகள் நிழற்குடையோ ஊருக்கு ஒதுக்குப்புறமாக சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்த பயன்பட்டு வருகிறது. மேலும் ஆரம்பத்தில் குடிநீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு வந்த நிலையில், குடிநீர் தொட்டிகளை சமூக விரோதிகள் சேதப்படுத்துவதாக கூறி தற்போது குடிநீரும் நிரப்பப்படுவதில்லை.

எனவே சம்பந்தப்பட்ட டோல்கேட் நிர்வாகம் இப்பகுதிகளில் உள்ள ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டுமென பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.