சாதி ரீதியான துன்புறுத்தல் – ஊராட்சி மன்ற தலைவர் புகார்!!

கரூரில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி தனக்கு சாதி ரீதியான துன்புறுத்தல் தரப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் தலா 5 பேர் என சம நிலையில் உள்ளனர். ஊராட்சி தலைவராக உள்ள சுதா பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்.

இந்த நிலையில் அவர் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள தனது கடமையை செய்யவிடாமல் அதிமுக, திமுக உறுப்பினர்கள் தொல்லை கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

9-வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி (அதிமுக) மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதி ரீதியாக பாகுபாடு செய்து வருகிறார் என்றும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி (திமுக) அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊராட்சி செயலர் நளினி மற்றும் அவருடைய கணவர் மூர்த்தி என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு ஊதியம் கேட்டு வருவதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்துள்ளார்.

இந்த புகார் மனுவை ஏற்று நேற்று நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் லீலாகுமார் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி சுதாவை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வாங்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் முன்னிலையில் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் உண்மை தன்மை மற்றும் புகார் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.