திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மொத்தம் 783 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க தலைமை ஆசிரியர் உட்பட 16 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், பிளஸ்-1 மாணவன் ஒருவன் கடந்த வாரம் பள்ளி நேரம் மாலை முடிந்து, வீடு திரும்பியபோது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் சிகரெட் புகைத்தபடியே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அருகில் சென்ற மாணவிகளின் முகத்தில் புகையைவிட்டு கேலி, கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
பெற்றோர்கள் மறுநாள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் சம்பந்தப்பட்ட அந்த மாணவனின் ஒழுங்கீனச் செயலை கண்டிக்கும்படி முறையிட்டிருக்கிறார்கள். அதன்பேரில், அந்த மாணவனை அழைத்து ஆசிரியர்கள் 4 பேர் கண்டித்திருக்கிறார்கள். ‘மற்ற மாணவர்கள் முன்பு கண்டித்தால் சரியாக இருக்காது’ எனக் கருதி தனியாக ஒரு அறைக்கு அழைத்துச்சென்று ஆசிரியர்கள் விசாரித்ததாகவும், ‘பெற்றோரை அழைத்து வராமல் பள்ளிக்கு வரக்கூடாது’ என்று எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த மாணவன் பெற்றோரை அழைத்து வராமல் பள்ளிக்கு வந்ததால், வகுப்பறைக்குள் அவனை சேர்க்கவில்லை.
ஒருகட்டத்தில் அந்த மாணவனை ஆசிரியர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவன், தன் பெற்றோரிடம் சென்று ஆசிரியர்கள் சாதிப் பெயரைச் சொல்லி திட்டி கடுமையாக தாக்கிவிட்டதாகச் சொல்லியிருக்கிறான். ஆரணி அரசு மருத்துவமனையில் மகனை சிகிச்சைக்காக அனுமதித்த பெற்றோர், ஆசிரியர்கள்மீது ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் மாணவனுக்கு ஆதரவாக ஒரு அரசியல் கட்சி அமைப்பினர் உள்ளே வந்ததால், விவகாரம் வேறு விதமாக வெடித்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன், ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவனை ஆசிரியர்கள் அடித்தது உண்மைதான் எனத் தெரியவந்தது. ஆனால், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதற்கான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும், மாணவனை தனி அறையில் வைத்து விசாரித்து அடித்த குற்றத்துக்காக 4 ஆசிரியர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் மற்ற ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.