இந்தியாவின் சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை செய்த சாட்சியங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை தள்ளுபடி செய்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, கும்பகோணம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து மீண்டும் சாட்சியங்களை விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சக்திகுமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு தரப்பில், 5 வருடங்களாக இந்த வழக்கின் சாட்சியங்கள் விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவதற்காக மனுதாரர் தரப்பில் சாட்சியங்களை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே கும்பகோணம் நீதிமன்றத்தில் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என வாதம் வைக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, “அரசு தரப்பில் தெரிவித்ததை போல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காகவே மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் கால அவகாசம் கோரி வருகிறார். இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 27ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது அன்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்றால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடர உத்தரவிடப்படும்” என தெரிவித்தார்.