புதுடெல்லி,
இளம் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சைபர் கிரைம் மற்றும் டிரோன்கள் தொடர்பான 2 நாள் மாநாடு வருகிற 29-ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது. 30-ந்தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் போலீஸ் துறை தொடர்பான கண்காட்சியும் இடம் பெறுகிறது. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 150 போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ‘சைபர் கிரைம் மேலாண்மை, டிரோன்கள் மற்றும் டிரோன்கள் எதிர்ப்பு பணியில் புதுமை மற்றும் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் போலீஸ் அதிகாரிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதைப்போல போலீசாரின் பணிகளில் டிரோன்கள் மற்றும் எதிர்ப்பு டிரோன்கள் உள்ளிட்டவற்றின் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.