சென்னை: 80, 90களில் மக்கள் நாயகனாக இருந்த நடிகர் ராமராஜன் ஆரம்ப காலகட்டத்தில் ராம நாராயணனின் உதவி இயக்குநராக இருந்தவர்.
ராமராஜன் இயக்குநர் ஆன பின்பு ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ , ‘ மருதாணி’ போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
இவர் இயக்கிய படங்கள் வெற்றி பெற்றாலும் மக்களிடையே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
ராமராஜனை நடிகனாக அறிமுகப்படுத்திய அழகப்பன்
இயக்குநர் அழகப்பன் “நம்ம ஊரு நல்ல ஊரு” என்ற திரைப்படத்தின் மூலம் ராமராஜனை நடிகனாக அறிமுகப்படுத்தினார், இந்த படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் வரிசையாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மக்கள் நாயகனாக ராமராஜன்
கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர் ராமராஜன் நடித்த”கரகாட்டக்காரன்”என்ற திரைப்படத்தின் வெற்றியால் மக்கள் நாயகன் என்று பெயர் பெற்று, தொடர்ச்சியாக கிராமப்புற கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததினால் 80, 90களில் நடிகர் ரஜினி, கமலை விட மிக பெரியளவில் கிராமப்புற மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.
வாழ்வு தந்த இயக்குனருக்கு உதவிய ராமராஜன்
இயக்குனர் அழகப்பனின் சொந்தத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான “என் வழி தனி வழி” என்ற திரைப்படம் படும் தோல்வியை சந்தித்தது, கிட்டத்தட்ட10 லட்சம் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது; என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் இருந்த சமயத்தில், சேலம் விநியோகஸ்தராக இருந்த எம்.எஸ் பிலிம்ஸ் பரமசிவன், நீங்க எதுக்கு வருத்தப்படுறீங்க ; நீங்க நடிகனாக அறிமுகப்படுத்தியவர் தான ராமராஜன் இப்பொழுது அவர் வெற்றியில் உச்சத்தில் இருக்கிறார், அவரிடம் கால்ஷீட் வாங்கினால் இந்த 10 லட்சம் கடனை அடைத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்.
ராமராஜனின் பெருந்தன்மை
இயக்குநர் அழகப்பன் அவருடைய இக்கட்டான சூழ்நிலையை நடிகர் ராமராஜனிடம் சொல்லிய போது,
உடனடியாக கால்ஷீட் கொடுத்து உதவியிருக்கிறார்; நடிகர் ராமராஜனும் கனகாவும் “தங்கமான ராசா” திரைப்படத்தில் நடிக்க சம்மதித்தார்கள், இந்த திரைப்படத்தின் தொடக்க விழா அன்றே எல்லா இடங்களிலும் திரைப்படம் விற்று தீர்ந்தன. விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்ற பணத்தை வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார், படம் வெளியாகி 100 நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது; அவர் வாங்கின 10 லட்சம் கடனையும் அடைத்து இருக்கிறார். நடிகர் ராமராஜன் மாதிரியான பெருந்தன்மையான நடிகர்கள் எல்லா காலகட்டத்திலும் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் தயாரிப்பாளர்கள் நிலைத்து திரைத்துறையில் இருக்க முடியும் என்று எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமான சுறா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.