தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் – எங்கெங்கு நடந்தன?

தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் தீவைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இன்றும் தொடர்ந்துள்ளன.

மூன்றாவது நாளாகச் இத்தகைய சம்பவங்கள் நடக்கும் நிலையில், ஏற்கெனவே பல்வேறு மாவட்டங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சமூகத்தைச் சீண்டும் வகையிலும், வன்முறைக்கு வித்திடும் வகையிலும் அமைந்திருப்பதாக காவல்துறை கூறுகிறது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் இணைந்து மிகப்பெரிய சோதனையை வியாழக்கிழமை நடத்தின.

தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு சில பிஎஃப்ஐ தலைவர்கள் உதவி செய்ததாகவும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடும்போக்கு அமைப்பில் சேர உறுப்பினராக சேருவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்த அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனைகளில் கேரளாவில் 8 பேர், கர்நாடகாவில் 15 பேர், தமிழ்நாடு 14 பேர், உத்தர பிரதேசத்தில் ஒருவர், ராஜஸ்தானில் இருவர் உள்ளிட்ட மொத்தம் 45 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின்போது தமிழ்நாட்டில் பதிவான இரண்டு வெவ்வேறு வழக்குககள் ஒன்றில் மூன்று பேரும் மற்றொன்றில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின்போது சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Attacks on BJP supporters in Tamil Nadu Where did they happen

எங்கெங்கு தாக்குதல்கள், தாக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன?

  • ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரான மனோஜ் குமார் பிஜேபியின் ஆதரவாளர். அவருக்கு கேணிக்கரையில் சொந்தமாக மருத்துவமனை உள்ளது. நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அளவில் இவரது மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களுகள் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். கார் தீ வைத்து எரிக்கபட்டது இடத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.
  • திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டியில் நகர முன்னாள் துணைத் தலைவர் சிவசேகர் என்பவரது மாருதி சுசுகி வாகனத்துக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு தீவைத்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்ததாகவும் கார் முழுவதும் எரிந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைப் பட்டியைச் சேர்ந்த பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் செந்தில் பால்ராஜ் என்பவரது வாகனங்கள் மீது நள்ளிரவு நேரத்தில் தீவைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கார், 4 இரு சக்கர வாகனங்கள் எரிந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்திலும் அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்துச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • கோயம்புத்தூர் மாவட்டம் கோவைப் புதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக, கேரள கேந்திர பொறுப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
  • கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் கமலக்கண்ணன் என்பவர் வீட்டில் ஒரு கும்பல் அதிகாலை 3.30 மணிக்கு கற்களை வீசி தாக்கியதாகவும் வாகனங்களுக்கு தீவைத்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் வாகனங்கள் எரிந்து சேதமடைந்ததுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துவிட்டன என காவல்துறை கூறுகிறது.
  • சென்னையை அடுத்த தாம்பரத்தில் சீதாராமன் என்பவரது வாகனங்களுக்கு இன்று அதிகாலை தீவைக்கப்பட்டது என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
  • மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல் வந்திருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சீண்டி, வன்முறையைத் தூண்டும் வகையில் இவை அமைந்திருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.