சென்னை: தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்றுமாலையுடன் முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
இதில், ஓட்டுநர்கள், சட்டப்பேரவைநிருபர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் மாநிலஅளவில் முக்கியமான சங்கம் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கமாகும்.இந்த சங்கத்தின் தற்போதைய தலைவராக பீட்டர் அந்தோணிசாமி உள்ளார்.
இந்நிலையில், இச்சங்கத்தின் தலைவர், செயலாளர், இணை செயலாளர்கள், பொருளாளர் ஆகிய பதவிகளுக்குபுதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. முந்தைய ஆண்டுகளில் 2 அணியினர் மட்டுமே களம் கண்டனர். ஆனால்,தற்போது 4 அணிகள் போட்டியிடுகின்றன.
இதில், ஏற்கெனவே தலைவராகஉள்ள பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் ‘வின்னர்’ அணியும், நிதித் துறைதுணைச் செயலர் வெங்கடேசன் தலைமையில் ‘அகரம்’ அணியும், பொதுத்துறைசார்பு செயலர் தமிழ்ஜோதி தலைமையில் ‘தி டீம்’ அணியும், பொதுப்பணித் துறை உதவிப் பிரிவு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ‘அச்சீவர்ஸ்’ அணியும் போட்டியிடுகின்றன. இதில் தமிழ்ஜோதி, தலைமைச்செயலக சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் பெண் வேட்பாளராவார்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக4 அணியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்றுகாலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவுற்றது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மாலையே தொடங்கியது. நள்ளிரவு அல்லது இன்று காலை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.