எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர, புது திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம்
தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது.
கிட்டத்தட்ட 99 சதவீதம், அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது என்றே சொல்லலாம். எனினும், அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்கிடையே அண்மையில் டெல்லி சென்ற அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது அதிமுக உள் விவகாரம், பாஜக உடனான கூட்டணி என, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக ஏற்கிறோம் என பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய பிரமாணப் பத்திரமும் தேர்தல் ஆணையத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பு சமர்ப்பித்து உள்ளது. இது, எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் பலத்தை அதிகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பதிலுக்கு போட்டியாக, தொண்டர்கள் கையெழுத்துடன் கூடிய பிரமாணப் பத்திரத்தை, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, மாவட்ட வாரியாக, தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 75 சதவீதத்திற்கும் மேல் தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கி அதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய அவர்கள் தீர்மானித்து உள்ளனர்.
இதை, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பார் என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த அவரது பாணியையே ஓ.பன்னீர்செல்வம் பின்பற்றுவது ரத்தத்தின் ரத்தங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.