75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நன்னடத்தை காரணமாக சிறைகைதிகள் 96 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக தமிழக சிறைத்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினம் மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறை தண்டனை அனுபவிக்கும் 700 கைதிகள் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 142 சிறைகளில் இப்போது 13,985 ஆண் கைதிகள், 611 பெண் கைதிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 596 பேர் இருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்பின் 161வது பிரிவின்படி நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும் பாலியல் பலாத்காரம், மோசடி, வழிப்பறி, கொள்ளை, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த குற்றம், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த சாராயம் விற்றல், வனம் தொடர்பான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்கள், ஜாதி மற்றும் மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் என 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவிர்த்து பிற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்படுவார்கள்.
முன்னதாக 75வது சுதந்திர தினவிழாவில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் அண்ணா பிறந்தாளில் ஏற்கனவே 21 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 2ஆம் கட்டமாக நேற்று 75 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதுவரையில் தமிழக சிறைகளில் 96 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 585 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM