கொலுவில், பார்க் செட் செய்யும்போது தரையில் மணல் கொட்டுவதைவிட, ஒரு சாக்குப்பை அல்லது சார்ட் பேப்பரை விரித்து, அதில் மணல் கொட்டி செட் செய்யலாம். மணல் கலையாமலும், கொலு முடிந்ததும் எடுக்க எளிதாக இருக்கும்.
கொலுவின் உயரத்தில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு பூ மாற்றும்போது, சில நேரம் பொம்மைகள் கீழே விழுந்து உடையக்கூடும்.
இதைத் தவிர்க்க, படிக்கட்டுகளில் அடுக்கும்போதே, பொம்மைகளின் தலைப்பகுதியில் பிளாஸ்டிக் பூக்களை செலோ டேப் கொண்டு ஒட்டலாம்.
பழைய பொம்மைகளுக்குப் பொலிவைக் கூட்ட, பொம்மைகளின் கிரீடம், நகைகள், புடவை பார்டர் இவற்றுக்கு கோல்டு கலர் பெயின்ட் அடித்தாலே பளபளப்பு கூடிவிடும். பிறகு தலைமுடிக்குக் கறுப்பு, சரும நிறத்துக்கு ரோஸ் பெயின்ட் செய்துவிடுங்கள்.
தரையில் அமர்ந்த நிலையில் இருக்கும் பொம்மைகளைக் கட்டம் போட்ட கைக்குட்டைகளின் மேல் உட்கார வையுங்கள். ஜமுக்காளம் விரித்து உட்கார வைத்ததுபோல இருக்கும். கைக்குட்டை பறந்து விடாமல் இருக்க, நான்கு ஓரங்களிலும் ஒரு சொட்டு ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.
பொம்மைகளை அடுக்கும் முன் படிக்கட்டில் விரித்திருக்கும் துணியை ஒரு கயிறு வைத்து கொலுப்படியுடன் சேர்த்துக் கட்டிவிட்டால், துணி நழுவி பொம்மைகள் கீழே விழும் என்ற பயம் இல்லாமல் இருக்கலாம்.
நவராத்திரி தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே கேழ்வரகை ஊறவைத்து, முளைக்கட்டி வைத்துக் கொண்டீர்களென்றால், கொலுவின்போது அதை வயல் வெளியாக வைத்துவிடலாம்.
முதலிலேயே, ஒன்பது டிஸ்போஸபிள் தட்டுகளில் நவதானியம், அரிசிப்பொரி, ஜவ்வரிசி, உப்பு, சின்ன சோழிகள், வண்ணப்பொடிகள், ஜிகினாத்தூள் இவற்றை வைத்து கோலங்கள் தயார் செய்து வைத்துக் கொண்டால், தினமும் பரபரப்பு இல்லாமல் ஒவ்வொன்றாகக் கொலுவின் முன் வைக்கலாம்.
தனியா, எள், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை நான்கையும் எண்ணெய்யில் வறுத்து கொரகொரப்பாகப் பொடித்துத் தூவினால் கார சுண்டல்கள் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
சாலைகள் அமைக்கும்போது ஆங்காங்கே `யு டர்ன் கிடையாது,’ `பள்ளிக்கூடம்… மெதுவாகச் செல்லவும்’, ‘நோ ஹாரன்’ என்று சிறிய சார்ட் பேப்பர்களில் எழுதி குச்சியில் ஒட்டிவிடுங்கள். கொலு, உங்கள் சமூக அக்கறையையும் காட்டும்.
தினம் கடைக்குப் போய் வெற்றிலை, பூ வாங்கக் கஷ்டமாக இருந்தால், நான்கைந்து நாள்களுக்கு தேவையவற்றை வாங்கி, மெல்லிய பேப்பர் அல்லது துணியில் தளர்வாகச் சுற்றி, ஒரு டப்பா அல்லது பிளாஸ்டிக் கவரில் வைத்து, ஃப்ரிட்ஜுக்குள் வைத்துவிட்டால் வாடாமல் இருக்கும்.