நான் ஒன்றும் குழந்தை இல்லை – நயன்தாராவின் அசத்தல் பேச்சு; வைரலாகும் ப்ரோமோ

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அவர் பலமுறை தனிநபர் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசராத நயன் தன் உழைப்பால் தற்போது நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அவர் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் திருமணம் செய்துகொண்டார்.

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில்  வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 

இத்திருமணத்துக்கான சாப்பாடு, ஹோட்டல் அறைகள், டெக்கரேஷன், மேக்-அப், பாதுகாப்பு  உள்ளிட்ட செலவுகளை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்தான் பார்த்துக்கொண்டதாகவும் அந்த வகையில் சுமார் 25 கோடி ரூபாய் வரை அந்நிறுவனம் செலவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  

இதனிடையே நயன்தாராவின் திருமணம் ஓடிடியில் எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பு பலரிடம் இருந்துவந்தது ஆனால்  சுமார் ஒரு மாத காலம் ஆன பிறகும் கூட வீடியோ வெளிவராததால் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன. நெட்பிளிக்ஸுக்கும் நயன்தாரா தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் மனக்கசப்புகள் இருக்கலாம் எனவும் அதுதான் தாமதத்துக்கான காரணமாக இருக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.

 

இந்நிலையில் நயன் – விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த ப்ரோமோ ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் திருமணத்திற்கு நடக்கும் ஏற்பாடுகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. மேலும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பேசும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

நயன் குறித்து பேசும் விக்னேஷ் சிவன், “அவர் சிறந்த நடிகை என்பதையெல்லாம் தாண்டி மிகச்சிறந்த மனிதர்” என்றார். அதேபோல் நயன்தாரா பேசுகையில், “நான் சினிமா குழந்தை கிடையாது. நான் ஒரு சாதாரண பெண். எதை செய்தாலும் அதில் எனது 100 சதவீதத்தை கொடுப்பேன்” என பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.