கடந்த 5-ம் தேதி சீனாவின் சிச்சுவானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 93 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது சக ஊழியர் லுவோ யோங்-குடன் 28 வயதான நீர்மின் நிலைய ஊழியர் ஜன் யூ (Gan Yu) தங்கியிருந்தார். கான் யூ நிலநடுக்கம் ஏற்பட்டபோது தனது சக ஊழியர்களுக்கு முதலுதவி அளித்தார். அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதன் மூலம் வெள்ளத்தைத் தடுக்க உதவினார் என அரசுக்குச் சொந்தமான சீன தேசிய வானொலி தெரிவித்துள்ளது. கான் யூ மற்றும் லுவோ இருவரும் உணவும், மொபைல் சிக்னல் இல்லாமலும் ஒரு நாள் முழுவதும் மின்நிலையத்திலேயே தங்கினர்.
அதன் பிறகு செப்டம்பர் 7-ம் தேதி இருவரும் 12 மைல்களுக்கு மேல் நடந்து அந்தப் பகுதியிலிருந்து வெளியேற முயன்றிருக்கிறார்கள். ஆனால் குறுகிய பார்வை கொண்ட கான் யூ, தனது கண்ணாடிகளை இழந்துவிட்டதால், மலைப்பாங்கான நிலப்பரப்பில் செல்ல சிரமப்பட்டிருக்கிறார். அதனால் இருவரில் ஒருவர் விரைவாகச் சென்று மீட்புக்குழுவை அழைத்து வருவதாக முடிவுசெய்து கான் யூ அங்கேயே சில காட்டுப் பழங்கள் மற்றும் மூங்கில் தளிர்களை சாப்பிட்டு உதவிக்காகக் காத்திருந்தார். செப்டம்பர் 8-ம் தேதி லுவோ யோங்-கை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். அவர் கானை விட்டுச் சென்ற இடத்தைக் குறிப்பிட்டு அங்கு ஒருவர் இருக்கிறார் எனவும், அவரையும் மீட்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
மீட்புக்குழு அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றபோது, கான் யூ அங்கு இல்லை. தூக்கி எறியப்பட்ட ஆடைகள் மற்றும் கால்தடங்களை மட்டுமே அவர்களால் காண முடிந்தது. அதனால் மீட்புக்குழுவினர், கான் யூ தாழ்வெப்பநிலைக்கு உள்ளாகி இறந்திருக்கலாம் எனக் கருதி திரும்பிச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், சம்பவம் நடந்து 17 நாள்களுக்குப் பிறகு கடந்த புதன்கிழமை வேட்டையாடச் சென்ற மலைகளை நன்கு அறிந்திருந்த உள்ளூர் விவசாயி ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கான் யூ-வைக் கண்டிபிடித்திருக்கிறார். உடனே மீட்புக்குழுவுக்கு தகவல் அளித்து அவரை மீட்டிருக்கிறார்கள்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் கான் யூ-க்கு பல எலும்புகள் உடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தான் உயிர்பிழைத்தது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கான் யூ, “17 நாள்கள் சோதனையிலிருந்து காட்டுப் பழங்களை சாப்பிட்டு தண்ணீர் குடித்து உயிர் பிழைத்தேன்” எனக் கூறியிருக்கிறார்.