நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பதினொரு சட்டமூலங்கள் மற்றும் நான்கு ஆண்டறிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அபாயகரமான விலங்குகள் (திருத்தச்) சட்டமூலத்தில் தண்டப்பணத்தொகையை ஆயிரம் ரூபாவிலிருந்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரும் ரூபாவரை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதுடன், சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சிறுவர்கள் என அழைக்கப்படும் வயது எல்லையை பதினாறிலிருந்து பதினெட்டாக அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ளது. இவற்றுக்கு குழுவின் அனுமதி கிடைத்தது.
அத்துடன், நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம், விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம், சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை (திருத்தச்) சட்டமூலம், மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை இரண்டாம் மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றத்தால் பலியானவர்களையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, சட்ட உதவி ஆணைக்குழுவின் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை என்பனவும் இங்கு கவனத்தில் எடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ அநுராத ஜயரத்ன, டயானா கமகே, கௌரவ ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ எம்.எஸ்.தௌபீக், கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பிரேம்நாத்.சீ தொலவத்த, கௌரவ சுதந்த மஞ்சுள, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, ஆகியோரும், குழுவின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.