புதுடில்லிமுஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக பேசப்பட்டது தொடர்பான வழக்கில், பத்திரிகையாளர் நவிகா குமாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் புதுடில்லி போலீசுக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, சில மாதங்களுக்கு முன் ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக பேசியதாக புகார் எழுந்தது.
பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவர் கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில் நுாபுர் சர்மா பங்கேற்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நெறியாளர் நவிகா குமார் மீது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல்அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.இதையடுத்து, கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நவிகா குமார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நவிகா குமாரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:நாட்டின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும் நவிகாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் புதுடில்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்ற வேண்டும்.
எதிர்காலத்தில் இந்த விவகாரத்தில் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும், அவற்றையும்புதுடில்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்ற வேண்டும். முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக்கோரி, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் நவிகா சார்பில் முறையீடு செய்ய, எட்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுவரையிலும் அவரை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போலீசாருக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement