காஞ்சிபுரம்: பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த கிராமங்களில் உள்ள பள்ளிகள் நேற்று வெறிச்சோடிச் காணப்பட்டன.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், கொடவூர், மேலேரி, நாகப்பட்டு, நெல்வாய் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் விமான நிலையம் அமைகிறது.
புதிய விமான நிலையத்துக்காக 4,791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 2,605 ஏக்கர் நஞ்சை நிலமாகும். இப்பகுதிகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இங்கு விமான நிலையம் அமைந்தால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், இப்பகுதி மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையத்தை செயல்படுத்துவது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் இது ஒரு மைல்கல்” என்று குறிப்பிட்டிருந்தார்.
விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு, சந்தை மதிப்பைவிட 3 மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதாகவும் தமிழக அரசு அறிவித்தது.
எனினும், இவற்றை ஏற்காத இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, விமான நிலையத்துக்கு அதிக அளவில் நிலம் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ள ஏகானாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து பொதுமக்கள் கடந்த 59 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த, அனைத்து விவசாய சங்கங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கிராமத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பாமக தலைவர் அன்புமணி, விமான நிலையம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்புக் கூட்டத்தை நடத்தியுள்ளார். பெரும்பாலானோர் விமான நிலையத்துக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், 7 பேர் கொண்ட குழுவை அமைத்து, அக்குழு விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அதனடிப்படையில் முதல்வரை சந்தித்து மக்களின் துயரங்களைத் தெரிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் வளமான நீர்நிலைகள் இருப்பதாலும், பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியுள்ளதாலும் அவர்களை வெளியேற்றக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏகனாபுரத்தில் நேற்று முன்தினம் 58-வது நாளாகப் போராட்டம் நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்டோர் கூடி, தங்கள் பகுதியில் விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
மாணவர்கள் போராட்டம்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று மேலேரி, நாகப்பட்டு, நெல்வாய், ஏகானாபுரம் ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால் அங்குள்ள அரசுப் பள்ளிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பள்ளியைப் புறக்கணித்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி அவர்கள் கோஷமெழுப்பினர்.
விமான நிலையத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் கிராமத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், போராட்டக்காரர்களை சமரசப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.
நிலத்தை இழக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்குவது, இழப்பீடு வழங்குவது, தேவையான உதவிகளைச் செய்வது தொடர்பாக அப்பகுதி முக்கிய நபர்களிடம் பேசி, இதுகுறித்து மக்களிடம் விளக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் சிலரிடம் கேட்டபோது, “அதிகாரிகள் பொய் வாக்குறுதிகளை அளிக்கின்றனர். சந்தை மதிப்பைக் காட்டிலும் 3 மடங்கு இழப்பீடு வழங்குவோம் என்பது ஏமாற்று வேலை. சந்தை மதிப்பில் 3 மடங்கு இழப்பீடு என்பதைவிட, எங்களுக்கு 3 மடங்கு நிலம் தர முடியுமா?
ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது தொடர்பாக அனைவரும் கூடிப் பேசி, பின்னர் உரிய முடிவெடுப்போம்” என்றனர்.