பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்!

முதலமைச்சரை பல்கலைக் கழக வேந்தராக நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடமில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தற்போது வரை 13 அரசு பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது வரை பல்கலைக் கழகங்களில் வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு இருந்து வருகிறது.

துணைவேந்தரை தேர்வு செய்ய தேவைப்படும் போது பல்கலைக் கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமனம் செய்யப்படுவர். இந்நிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும், புதிதாக 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவிலும் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:

தமிழகம் முற்போக்கான மாநிலமாக திகழ்கிறது; மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பில் முன்னிலை வகிக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறந்த மனிதர். தமிழகத்தில் திமுக அரசுடன் நல்லுறவு நீடிக்கிறது. கல்வித் துறை தொடர்பான தமிழக அரசின் மசோதாக்கள் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ஆளுநருக்கு பதில் பல்கலைக் கழக வேந்தராக முதலமைச்சரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை. கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. ஆகையால் அரசியல் சாசன ஆலோசனைகளைப் பெற வேண்டி உள்ளது. பல்கலைக் கழகங்களில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்கு நான் முக்கியத்துவம் தருகிறேன்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஓர் ஆபத்தான இயக்கமாகும். என்னுடைய அனுபவத்தில் பல்வேறு இயக்கங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்துள்ளேன். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஆபத்தான இயக்கம் தான் என ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.