திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பலர் பழனிக்கு வருகின்றனர். இதனால் கூட்டம் அங்கு அலைமோதும். இதனையொட்டி பக்தர்கள் எளிதாக மலைக்கோயிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் அடிவழிப்பாதை மட்டுமின்றி மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு கிரிவீதியில் அமைந்துள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் 3 மின் இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவது மின்இழுவைரயில் பழுது ஏற்பட்டதன் காரணமாக அந்தச் சேவையானது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பழுதான மூன்றாவது மின்இழுவைரயில் பழுது நீக்கப்பட்டு இன்று முதல் மீண்டும் மின்இழுவை ரயில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது.
மின்இழுவைரயிலுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருஷ்டி சுற்றப்பட்டு பூசணிக்காய் உடைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் இழுவை ரயில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டுள் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக, நேற்று பஞ்சாமிர்த பெட்டிகளை மின் இழுவை ரயிலில் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.