பாலியல் தொழிலுக்கு மறுத்த இளம்பெண்; கொலைசெய்து உடலை வீசிய பாஜக தலைவர் மகன்! – உத்தரகாண்டில் பரபரப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடத்தி வருகிறது. அங்கிருக்கும் ரிஷிகேஷில் மூத்த பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவுக்குச் சொந்தமான ரிசார்ட் அமைந்திருக்கிறது. இந்த ரிசார்ட்டை அவர் மகன் புல்கித் ஆர்யா கவனித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம், ரூ.10,000 சம்பளத்துக்கு வரவேற்பாளராக பவுரி கர்வால் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அந்தப் பெண் திடீரென மாயமாகியிருக்கிறார். அவரது 2 செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கின்றன.

போலீஸ்

பல இடங்களில் தேடிய அவர் தந்தை வீரேந்திர பண்டாரி, இறுதியில் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். ஆரம்பத்தில் காவல்துறை புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், நடந்த சம்பவம் குறித்து ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாநில சட்டசபை சபாநாயகர் ரிது கந்தூரியின் தலையீட்டுக்குப் பிறகு, வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பா.ஜ.க தலைவரின் மகன் புல்கித் ஆர்யாமீது சந்தேகமிருப்பதாக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில் காவல்துறை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறை உயரதிகாரி ஒருவர், “பாதிக்கப்பட்ட பெண் கடந்த மாதம் சம்பவம் நடந்த ரிசார்ட்டில் பணியில் சேந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு வாட்ஸ்அப்பில், `ஹோட்டல் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அதிகம் சம்பாதிக்க இங்கு தங்கும் விருந்தினர்களுக்கு பாலியல் சேவை வழங்க என்னை வற்புறுத்துகிறார். ஒருமுறை என்னை கட்டாயப்படுத்தி முத்தமிட முயன்றார். நான் இங்கே பாதுகாப்பற்று உணர்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அவ்வப்போது புல்கித் ஆர்யா தன்னிடம் தவறாக நடக்க முயல்வதாக சகஊழியர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க தலைவர் வினோத் ஆர்யா

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு 8 மணியளவில், குற்றம்சாட்டப்பட்ட புல்கித் ஆர்யா (35), ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர்(35), ஊழியர் அங்கித் குப்தா(19) ஆகியோர், அந்தப் பெண்ணுடன் இரண்டு பைக்குகளில் ரிசார்ட்டை விட்டு சில்லா பேரேஜுக்குச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு மூவரும் மது அருந்திவிட்டு, அந்தப் பெண்ணிடம் பாலியல் உறவுக்கு ஒப்புக்கொள்ளும்படி தகராறு செய்திருக்கிறார்கள். அந்தப் பெண் உறுதியாக மறுக்கவே, ஆத்திரத்தில் கொலைசெய்திருக்கிறார்கள். அவர் சடலத்தை அருகில் இருந்த கால்வாயில் தூக்கிப்போட்டுவிட்டு ரிசார்ட் திரும்பியிருக்கிறார்கள்.

புல்கித் ஆர்யா

அடுத்த நாள் காலை, அவர்கள் திட்டத்தின்படி, மூன்று பேரும் ரிசார்ட்டில் இருந்த மற்றவர்களிடம், அந்தப் பெண் காணாமல் போனதாகக் கூறி நாடகமாடியிருக்கிறார்கள். ஆனால் எங்கள் விசாரணையில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டர்னர். கொலைசெய்யபட்ட பெண்ணின் உடலை தேடி வருகிறோம். குற்றவாளிகள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக, பட்வாரி இன்ஸ்பெக்டர் விவேக் குமார் இந்த வழக்கில் சம்பவம் நடந்து மூன்று நாள்களுக்குப் பிறகுதான் முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவுசெய்திருக்கிறார்.

பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கும் என நாங்கள் அஞ்சுகிறோம். மாவட்ட நிர்வாகம் மேலதிக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், கொலைசெய்யப்பட்ட பெண் காணாமல் போனது குறித்து விவேக் குமார் பதிவுசெய்த வழக்கில், புகார் அளித்தவர் குற்றம்சாட்டப்பட்ட ரிசார்ட் உரிமையாளர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தந்தை, “என் மகளைத் தேடி சிசிடிவி-யைச் சோதிக்க நான் ரிசார்ட்டுக்குச் சென்றேன். ஆனால் கேமரா உடைக்கப்பட்டிருந்தது. காவல்துறையில் புகார் அளிக்க சென்றபோது அவர்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளூர் காவல்துறை செயல்பட்டதை நேரில் கண்டேன். அதன்பிறகே, நீதி வேண்டி வீடியோ வெளியிட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அழைத்து செல்லும்போது பெண்கள் காவல்துறை வாகனத்தை தடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களை தாக்கியதால் அந்தப் பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரகாண்ட் பா.ஜ.க முதல்வர் புஷ்கர் சிங் தாம்

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் பா.ஜ.க முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெள்ளிக்கிழமை இரவு மாநிலத்தில் செயல்படும் அனைத்து ரிசார்ட்களையும் ஆய்வு செய்து, சட்டவிரோதமாக கட்டப்பட்டவைமீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநிலத்தில் உள்ள ஓய்வு விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளின் ஊழியர்களின் நிலை குறித்த தகவல்களைப் பெறவும், அவர்களின் புகார்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளவும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.