நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டிருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரிப்பதில் அந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரதமர் மோடி பீகார் மாநிலம் பாட்னாவுக்கு சென்றபோது, அவர் மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டமிட்டதாகவும், இதற்காக பயிற்சி முகாம் ஒன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறையினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த பணம் பெரும்பாலும் ரொக்கமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அமலாக்கத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் பெர்வேஷ் அகமது, இலியாஸ், அப்துல் முகீத் ஆகியோரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் பண மோசடி தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு முதலே பலமுறை அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
மத்திய விசாரணை அமைப்புகளின் இந்த சோதனைகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.