பெரியபாளையம்: பெரியபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடியதால் மாஜி அமைச்சர் அப்செட் ஆனார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் கோபால், பி.எம்.பிரசாத், பேரூர் செயலாளர்கள் ஷேக்தாவுத், ரவி முன்னிலை வகித்தனர். ஒன்றிய இணைச் செயலாளர் வித்யாலட்சுமி வேதகிரி, காயத்ரி, பூண்டி ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்கட்ரமணா, சிவக்குமார், கோதண்டன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.பி.வேணுகோபால், முன்னாள் அமைச்சர் சின்னையா, மாவட்ட செயலாளர் பலராமன், தலைமைக்கழக பேச்சாளர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். முன்னாள் அமைச்சர் சின்னையாவும் முன்னாள் எம்பி. வேணுகோபாலும் பேசியபோது கூட்டத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தது. மேலும் மாஜி அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே கட்சியினர் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் மாஜி அமைச்சர் அப்செட் ஆகி, உடனடியாக தனது பேச்சை முடித்துக்கொண்டார். இது தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஒன்றிய அவைத் தலைவர் விஜயன் நன்றி கூறினார்.