பொன்னியின் செல்வன் படம் நவீன தொழில் நுட்பங்களோடு வெளிவந்துள்ளது.
இதற்கு முன்னர் தொழில் நுட்ப வசதி இல்லாத காலகட்டத்தில் வெளியாகி சக்கை போடுபோட்ட சரித்திர, புராண படங்கள் பல வந்துள்ளது.
.
1950 களில் தமிழ் சினிமா புதிய அவதாரமெடுத்தது. சரித்திர, புராண கதைகள் நாடக மேடையிலிருந்து வெள்ளித்திரைக்கு மாறியது.
புராண, இதிகாசம், வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி வரை நடிக்க ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் படம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் வரும் செப்.30 வெளியாக உள்ளது. இந்தப்படம் பலரது கனவுப்படம் எம்ஜிஆரே ஆசைப்பட்ட படம் ஆனால் பல காரணங்களால் எடுக்க முடியாமல் போனது. ஆனால் முக்கால் நூற்றாண்டுக்கு பின் அது சாத்தியமாகியுள்ளது. இந்த 70 ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் பல படங்கள் வெளியாகியுள்ளது.
ரங்காராவ் நகைச்சுவையில் மஹாபாரத கதை மாயாபஜார்
1957 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம் மாயாபஜார். மஹா பாரதத்தின் ஒரு பகுதியை வைத்து எடுக்கப்பட்ட படம். அபிமன்யூவாக ஜெமினியும், அபிமன்யூவின் மனைவியாக சாவித்திரியும், கிருஷ்ணனாக என்.டி.ஆரும், கடோத்கஜனாக ரங்காராவும் நடித்திருப்பார்கள். அபிமன்யூ காதலுக்கு உதவும் பீமன் மகன் கடோத்கஜனின் மாயாஜாலங்கள் படம் முழுவதும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கல்யாண சமையல் சாதம் பாடல் அந்த காலத்தில் மிகப்பிரபலமான பாடல். இந்தப்படத்தில் தமிழில் ஜெமினிகணேசன் பாத்திரத்தை தெலுங்கில் நாகேஸ்வரராவ் செய்திருந்தார்.
என்.டி.ஆர் ராமன், சிவாஜி பரதனாக நடித்த சம்பூர்ண ராமாயணம்
ராமாயணத்தை மையமாக வைத்து முதன்முதலில் 1958 ஆம் ஆண்டு சம்பூர்ணராமாயணம் படம் வெளியானது. இதில் என்.டி.ராமாராவ் சிவாஜிகணேசன், பத்மினி, டி.கே.பகவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். . ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். டி.கே.பகவதி ராவணனாகவும், என்.டி.ஆர் ராமன் வேடத்திலும், சிவாஜி கணேசன் பரதன் வேடத்திலும் நடித்திருப்பர். ராகங்கள் குறித்து ராவணன் பாடும் சங்கீத சௌபாக்யமே பாடல் பிரசித்தி பெற்றது. சிதம்பரம் ஜெயராமன் ராகங்களை பிரித்து பாடியிருப்பார். மிகுந்த புகழ் பெற்ற பாடலாகும்.
வரி, வட்டி, திரை, கிஸ்தி வரலாறு பேசிய வீரபாண்டிய கட்டபொம்மன்
வரலாற்று பாத்திரமான வெள்ளையனை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை அடிப்படையாக வைத்து 1959 ஆம் ஆண்டு வெளியானது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம். வெள்ளையன் ஜாக்சன் துரையை எதிர்த்து சிவாஜி கணேசன் பேசும் வரி, வட்டி, திரை, கிஸ்தி வசனம் அதன் பின்னர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்களுக்கு பாலபாடம். வசனத்தை எழுதிய ஜாவர் சீதாராமனே கடைசியில் வெள்ளைக்கார நீதிபதியாகவும் வருவார். இப்படத்தில் சிவாஜி கணேசன் கட்ட பொம்மனாகவும், ஜெமினிகணேசன் வெள்ளையத்தேவனாகவும் நடித்திருந்தனர்.
மருது சகோதரர்கள் மாண்பை கூறிய சிவகங்கை சீமை
வெள்ளையரை எதிர்த்து போராடிய மருது சகோதரர்கள் வாழ்க்கை வரலாற்றை வைத்து 1959 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் சிவகங்கை சீமை. இதில் சிறப்பான விஷயம் கண்ணதாசனின் வசனம். இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர், டி.கே.பகவதி, வீரப்பா உள்ளிட்டோர் நடித்திருப்பர். வெள்ளையர்களை எதிர்த்து போராடிய மருது சகோதரர்கள் இறுதியில் வெள்ளை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். அவர்களது 20 ஆண்டுகால பொற்கால ஆட்சியால் சிவகங்கை மக்களின் தெய்வமாக இன்றும் மருது சகோதரர்கள் போற்றப்படுகின்றனர்.
எம்ஜிஆர் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் காஞ்சித்தலைவன்
1963 ஆம் ஆண்டு எம்ஜிஆர் கருணாநிதி இணைந்து தயாரித்த படம் காஞ்சித்தலைவன். இதில் பல்லவ மன்னனாக எம்ஜிஆர் நடித்திருப்பார். பானுமதி, விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோர் நடித்திருப்பர். கருணாநிதி கதைவசனம் எழுதினார். பல்லவ மன்னன் வரலாற்றை அடிப்படையாக கொண்ட படம், அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் ஒரு கொடியில் இருமலர்கள் பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
மஹாபாரதத்தில் சூழ்ச்சிகளை சொல்லும் கர்ணன் திரைப்படம்
1964 ஆம் ஆண்டு வெளியான கர்ணன் படம், மஹாபாரதத்தில் கர்ணன் பாத்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். சிவாஜி கணேசன் கர்ணனாகவும், என்.டி.ஆர் கிருஷ்ணனாகவும், அசோகன் துரியோதனனாகவும் நடித்திருப்பர். உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் பிரபலமானது. படத்தில் கிருஷ்ண அவதாரமாக நடிக்கும் என்.டி.ஆர் அர்ஜுனனை காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கைகள், கௌரவர்களை அழிக்க எடுக்கும் வியூகம் சுவைபட விவரிக்கப்பட்டிருக்கும். பாடல்களுக்காகவே பார்க்கப்பட்ட படம்.
கதை கதையாக சிவனின் திருவிளையாடலை சொன்ன திருவிளையாடல் படம்
1965 ஆம் ஆண்டு வெளியானதிருவிளையாடல் படம் சிவ புராணத்தை அடிப்படையாக கொண்ட படம். சிவனின் திருவிளையாடல்களை சுவைப்பட சொல்லியிருப்பார்கள். இப்படத்தின் வசனங்கள் தமிழக மக்களுக்கு மனப்பாடம், சிவாஜி கணேசன் ஒவ்வொரு பாத்திரத்திலும் கலக்கியிருப்பார். அதிலும் நக்கீரன், சிவபெருமான், தருமி பாத்திரம் பெரிய நகைச்சுவையாக இருக்கும். இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கும்.
எம்ஜிஆரின் கடைசிப்படம் சரித்திரப்படம்
மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1977 ஆம் ஆண்டு வெளியான படம். அகிலன் எழுதிய கயல்விழி நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். எம்ஜிஆரின் கடைசி படம் இது. பாண்டிய மன்னன் இழந்த நாட்டை மீட்க கவிஞராக மாறுவேஷம் போட்டு படை திரட்டி நாட்டை மீட்கும் படம். மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். இந்தப்படத்தில் நடித்து முடிக்கும் முன் எம்ஜிஆர் முதல்வராகிவிட்டார். மீதிக்காட்சிகளை நடித்து முடித்து கொடுத்துவிட்டு பதவிஏற்றார். இதன் பின் எம்ஜிஆர் படத்தில் நடிக்கவில்லை.