பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு: 9,292 மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்தனர்

சென்னை: பொறியியல் கலந்தாய்வு முதல் சுற்றில் 9,292 மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 12,294 மாணவர்கள் பங்கேற்றதில் 10,351 பேருக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டன.

இதற்கிடையே காலியிடங்கள் ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு கொண்டுவந்த புதிய நடைமுறையின்படி சேர்க்கை கடிதம் பெற்ற 10,351 மாணவர்களில் 9,292 பேர் கல்விக் கட்டணம் செலுத்தி தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளனர். மீதமுள்ள 1,059 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை. இதேபோல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்ட 405 மாணவர்களில் 306 பேர் மட்டுமே சேர்க்கையை கட்டணம் செலுத்தி உறுதி செய்துள்ளனர். மற்ற 99 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை. இதன்மூலம் நிரம்பாமல் இருந்த 1,158 இடங்கள் மீண்டும் திரும்பப் பெறப்பட்டு முன்னேற்ற வாய்ப்பு கோரியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதில் நிரம்பியவை போக மீதமுள்ள இடங்கள் 2-ம் சுற்று கலந்தாய்வில் சோ்க்கப்படும். தொடர்ந்து 2-ம் சுற்று கலந்தாய்வு நாளை (செப். 25) தொடங்கி நடைபெற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.