“மனசுக்கு பிடிச்சு செஞ்சா, பிசினஸ்ல தோல்வி வராது…’’ – அனுபவம் பகிரும் தொழிலதிபர்

இன்றைக்கு பிசினஸ் ஆரம்பிக்கும் கனவுகளுடன் இருக்கும் இளைஞர்கள் ஏராளம். ஆனால், தெளிவான ஐடியா இல்லாததால், ஏதேதோ செய்து தோற்றுப் போய், மாதச் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறவர்களே அதிகம். பிசினஸ் ஆரம்பிக்க நினைக்கும் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதற்கான டிப்ஸ்களைத் தருகிறார் தொழிலதிபர் வெங்கடேஷ். அவருடன் பேசியபோது பிசினஸ் தொடர்பான பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

தொழிலதிபர் வெங்கடேஷ்

பிசினஸ் ஆரம்பிப்பதில் நம் இளைஞர்களின் சிந்தனைப் போக்கு எப்படி இருக்கிறது?

‘‘இன்றைய இளைஞர்கள் படித்து முடித்தவுடனே, ஒரு நல்ல வேலைக்கு போக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, ஒரு நல்ல பிசினஸை ஸ்டார்ட் பண்ணலாம் என்று நினைக்க மாட்டேன் என்கிறார்கள். காரணம், பயம். பிசினஸ் என்பது கேம் விளையாட்ற மாதிரி. ஜாலியாக விளையாடினால் ஈஸியாக ஜெயிக்கலாம். தோத்துப் போயிடுவோமோ என்கிற பயத்துல விளையாடினா தப்பு செய்வோம். அந்தத் தப்பு நம்மை தோத்துப் போக வைக்கும். ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிக்க நினைப்பதைவிட, நாம் நாலு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் இளைஞர்களிடம் ஏற்பட வேண்டும்.’’

பிசினஸ் என்றால் ரிஸ்க் இல்லையா, எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்திடாதே?

‘‘ஆமாம். நீங்கள் வேலை பார்க்கிற நிறுவனம் உங்களை வேலையை விட்டு நீக்காது என்பதில் என்ன நிச்சயம்? உங்களை வேலையை விட்டு நீக்கலாம் அல்லது உங்கள் கம்பெனியை இழுத்து மூடப்படும் நிலையும் வரலாம்.

பிசினஸ்

இப்படி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதே மாதிரிதான் பிசினஸ்லையும். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லையே. லாஸ் இல்லாமல் லாபத்தைப் பார்க்க முடியாது. அதுக்காக லாஸ் ஆகும் என்று சொல்லவில்லை. ஒரு வேளை, ஆனால் அந்தத் தோல்வியையே நம் வெற்றியாக மாற்ற வேண்டும்.’’

பிசினஸை தனியாக ஆரம்பிக்கலாமா அல்லது பார்ட்னர்களுடன் சேர்ந்து ஆரம்பிக்கலாமா?

‘‘அது உங்கள் பார்ட்னர்களைப் பொறுத்து. கஷ்டமோ, நஷ்டமோ எதுவாக இருந்தாலும் இரண்டு பேருமே பொறுப்பேற்றுக் கொள்வதுதான் பார்ட்னர்ஷிப். அனைத்தையுமே சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் என் பிசினஸை ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை தனிஆளாக கவனிக்கிறேன்.

25 வருடம் ஆயிற்று. என் தவறுகளை நானே சரிசெய்துக் கொள்வேன். யார் மேலையும் பழி போட முடியாது. கருத்து வேறுபாடு கிடையாது. அனைத்திற்கும் நான் மட்டுமே பொறுப்பு. ஒரு பிரச்னையுமே இல்லை. எனக்கும் இதுதான் பிடித்திருக்கிறது. ஒருவேளை, உங்களுக்கு பார்ட்னர் தேவைப்பட்டால் நீங்கள் ஒரு நல்ல பார்ட்னருடன் பிஸ்னஸை ஆரம்பிக்கலாம்.’’

பிசினஸ் பார்ட்னர்

பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம் என்றால், என்ன பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்?

‘‘அதை நீங்கதான் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, எனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும். கல்லூரியை முடித்தவுடனே கோயம்புத்தூரில் ஐந்து வருடம் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன். கம்ப்யூட்டர் பற்றிய கம்பெனிதான். நல்ல அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்தை எல்லாம் வைத்து 1997-ல் சிஸ்மேன்டெக் என்ற என் சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். இது ஒரு ஹார்டுவேர் நிறுவனம். இதே மாதிரி உங்களுக்கு எது பிடிக்குமோ, அதை நீங்கள்தான் தேர்வு செய்து ஜெயிக்க வேண்டும்.’’

அம்மா, அப்பாவிற்கு பிடிக்கவில்லை என்றால்?

பிசினஸ் செய்யப் போகிறேன் என்று சொல்லும்போது வீட்டில் அம்மா, அப்பாவிற்கு பிடிக்கவில்லை என்றால்… என்ன செய்வது?

‘‘உங்கள் குடும்பத்திலேயே நீங்கள்தான் முதலில் பிசினஸ் செய்யப் போகிறீர்கள் எனில், கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பிசினஸ்

ஆனால் அவர்களுக்குப் புரிய வைப்பது நம் கடமை. நாம் முதலில் நம் முடிவில் தைரியமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் முதன்முதலில் பிசினஸ் பக்கம் போனதே நான்தான். அம்மா, அப்பா இருவருமே அரசு வேலையில் இருந்தனர். அதனால் நான் பிசினஸ் ஆரம்பிப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை. ஆனால், என்மேல் நம்பிக்கை வைத்தார்கள். என்னை ஊக்குவித்தார்கள். இதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. “நான் பிசினஸ் ஆரம்பிக்கப் போகிறேன்” என்று உங்கள் குழந்தைகள் சொன்னால் அவர்களை நீங்கள் ஊக்குவித்தால் போதும். கண்டிப்பாக அவர்கள் வெற்றி அடைவார்கள்.’’

பிசினஸ் ஆரம்பிக்கணும் என்றால் நிறைய பணம் வேண்டுமே?

‘‘பணம் தேவைதான். அதைவிட முக்கியம், பிசினஸுக்கான தெளிவான ஐடியா. அதை செயல்படுத்தும் பிளான். ஒரு நல்ல பிசினஸை ஸ்டார்ட் பண்ணப் போகிறார்கள் எனில், பணம் தருவதற்கு ரெடியாக இருக்கிறது நம் அரசு. சுயதொழில் தொடங்குவதற்காகவே பல லோன் வசதிகளையும் நம் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி கொண்டாலே போதும்.’’

பிசினஸ்…

பிசினஸில் ஏற்படும் தோல்விகளை எப்படி சமாளிப்பது?

‘‘பிசினஸ் நன்றாக செல்லும்போது நாம் நம்பிக்கையுடன் இருப்பதைவிட, அது மோசமாக செல்லும்போது அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். என் பிசினஸ் பயணத்தில் கஷ்டம் வந்தபோது, நானே இரண்டு, மூன்று முறை ‘ஏன்டா நம்ம இந்த பிஸ்னஸை ஆரம்பிச்சோம்’ என்று யோசித்து இருக்கிறேன். ஆனாலும் என் பிசினஸை நான் கைவிட்டது இல்லை. அதனால் என் பிசினஸூம் என்னைக் கைவிட்டது கிடையாது.

ஒவ்வொரு முறையும் நீங்கள் தோல்வி அடையும்போதும் சோர்ந்துபோகும்போதும் ‘எதற்காக இதை நீங்கள் ஆரம்பித்தீர்கள்’ என்று நினைத்துப் பாருங்கள். உங்களால் முடியும் என்று நம்புங்கள். தோல்வியைப் பற்றி சிந்திக்காமல் வெற்றி அடைய முயற்சி செய்யுங்கள். நீங்கள் பெரியதாக வெற்றியடைந்த பிறகுதான் உங்களுக்கு தெரியும், உங்கள் வெற்றியின் ரகசியம் உங்கள் தோல்விதான் என்று.’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.