சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்த திரையுலகையும் தனது கவர்ச்சியான நடிப்பால் கட்டி ஆண்டவர் சில்க் ஸ்மிதா.
80 முதல் தொன்னூறுகள் வரை சில்க் ஸ்மிதாவின் தரிசனத்துக்காக காத்துக்கிடந்த ரசிகர்கள் ஏராளம்.
1960ல் பிறந்த சில்க் ஸ்மிதா 1996ம் ஆண்டு தன்னுடைய 35வது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
கண்களில் கவர்ச்சி விருந்து
மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பயணத்தைத் தொடங்கி திரையுலகையே தனது வசீகரப் பார்வையால் ஒருவர் கட்டிப் போட்டார் என்றால், அது சில்க் ஸ்மிதாவாகவே இருக்க முடியும். நடனத்தில் அதிக விருப்பம் கொண்டிருந்த சில்க் ஸ்மிதா, திரைத்துறையில் டான்ஸராகவே அடியெடுத்து வைத்தார். ஆனால், ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் கிடைத்த புகழ் வெளிச்சம், அவரை பட்டித் தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது. இயல்பாகவே சிறந்த நடிகையான சில்க் ஸ்மிதா, காலப்போக்கில் கவர்ச்சிக்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டார்.
அலைகள் ஓய்வதில்லை சில்க்
சில்க் ஸ்மிதா என்றாலே கவர்ச்சி தான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வெளியாகி புதிய அடையாளம் கொடுத்தது. இதுபற்றி சில்க் ஸ்மிதா அளித்திருந்த ஒரு பேட்டியில், “வண்டிச்சக்கரம் படத்துக்கு பின்னர் கிளாமரான கேரக்டர்களே வந்துகொண்டிருந்தன. அப்போது இயக்குநர் பாரதிராஜா தான் எனக்கு முற்றிலும் வித்தியாசமான கேரக்டரை கொடுத்து எனது கேரியரில் திருப்பத்தை ஏற்படுத்தினார். பாரதிராஜா துணிச்சலான அந்த கேரக்டரை கொடுத்தார்” எனக் கூறியிருந்தார். தொடர்ச்சியாக கவர்ச்சியான பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சில்க் ஸ்மிதாவுக்கு, அலைகள் ஓய்வதில்லை படம் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது.
சில்க் ஸ்மிதா பாடல்கள் இல்லாமல் படங்கள் இல்லை
ரஜினிகாந்த், கமல் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் சில்க் ஸ்மிதா கண்டிப்பாக இருப்பார் என்ற நிலை இருந்தது. குறிப்பாக சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சியான பாடல் இல்லாமல், டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியானது இல்லை. நேத்து ராத்திரி யம்மா, அடியே மனம் நில்லுனா நிக்காதடி, பூவே இளைய பூவே, அடுக்கு மல்லிகை, பொன்மேனி உருகுதே, பேசக் கூடாது, ஆடி மாசம் காத்தடிக்க என இன்றும் சில்க் ஸ்மிதாவின் பாடல்கள் ரசிகர்களை விட்டுவைக்கவில்லை.
சோகத்தில் முடிந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை
திரை நட்சத்திரங்களின் வெளித்தோற்றத்துக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசங்கள் எப்படி இருக்கும் என்பதற்கு சில்க் ஸ்மிதா ஒரு எடுத்துக்காட்டு. பெயர், புகழ், பணம், திறமை என எல்லாம் இருந்தும் சில்க் ஸ்மிதாவிற்கு சரியான அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை. முக்கியமாக நல்ல வாழ்க்கையும் இல்லாமல் துயரத்தில் இருந்த சில்க் ஸ்மிதா, தற்கொலை எனும் விபரீதமான முடிவை எடுத்து இவ்வுலகை விட்டே மறைந்தார். பலராலும் பலவிதங்களின் பயன்படுத்தப்பட்ட சில்க் ஸ்மிதா, தற்கொலை செய்துகொண்டது திரையுலகுக்கே மிகப் பெரிய இழப்பாக அமைந்துவிட்டது. கவர்ச்சியையும் கடந்து சில்க் ஸ்மிதாவின் திறமைகள் முழுமையாக வெளியாகும் முன்னரே அவர் தற்கொலை செய்துகொண்டது தான் சோகத்தின் உச்சம்.