சென்னை: கிருஷ்ணகிரி அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கான மிதிவண்டிகள் சாதிரீதியாக வகைப்படுத்தப்பட்ட சம்பவத்தில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்து, முதன்மைகல்வி அலுவலர், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கோரியுள்ளது.
இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் செப். 22-ம் தேதி ‘‘தமிழ்நாடு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் ஒவ்வொன்றும் சாதி ரீதியாக வகைப்படுத்தப்பட்டிருந்தது தொடர்பாக கண்டனங்கள் எழுந்துள்ளன’’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.
கிருஷ்ணகிரி தொகரப்பள்ளியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான இலவச மிதிவண்டிகள் விநியோகத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த வண்டிகளில் பிசி, எம்பிசி, எஸ்சி என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. எஸ்சி என்று குறிப்பிட்ட மிதிவண்டி கடைசி வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இத்தகைய செயல்பாடு மாணவர்களிடையே சாதி ரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்தும் என்பதால், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.