புதுடெல்லி: மின் கட்டண உயர்வு வழக்கை தாமதிக்காமல் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், அடுத்த வாரம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த தனி நீதிபதி, ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்த்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் வரையில், மின் கட்டண உயர்வு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக் கூடாது,’ என உத்தரவிட்டார்.
பின்னர், தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், தமிழக அரசின் மின் கட்டண உயர்வு அரசாணை செல்லும் என கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும், தமிழக அரசு தாக்கல் செய்த கேவியட் மனுவும், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே.மகேஸ்வரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘இந்த வழக்கை தாமதம் செய்யாமல் உடனடியாக பட்டியலிட்டு விசாரித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு அடுத்த வாரம் வாரம் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அமர்வில் பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என அறிவித்தனர்.