புதுடெல்லி: மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், ஆயுத கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்திய ஐடி பொறியாளர்கள் சிக்கி இருப்பதால், அவர்களை மீட்பது கடினம் என ஒன்றிய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன், வேலை தருவதாக கூறியுள்ள வெளிநாட்டு முதலாளிகள், ஆட்சேர்ப்பு முகவர்களின் நற்சான்றிதழ்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மியான்மரின் கயின் மாகாணத்தில் உள்ள மையவாடி பகுதி, முழுமையாக மியான்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. சில இன ஆயுதக் குழுக்கள் அதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. மியான்மர் இந்திய தூதரகம் சமீபத்தில் 60 பேரில் 30 இந்தியர்களை மீட்டது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆயுத குழுக்களிடம் சிக்கியுள்ள இந்திய பொறியாளர்களை மீட்பது கடினம் என்பதை, வெளியுறவு அமைச்சகம் மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக கருதப்படுகிறது.