ராஜபாளையம்: திமுக எம்.எல்.ஏ மணல் கொள்ளைக்கு உடந்தையா? – சர்ச்சை ஆடியோவும், விளக்கமும்!

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகப் பணியாற்றி வருபவர் தி.மு.க-வைச் சேர்ந்த தங்கப்பாண்டியன். இவரின் ஆட்கள், தேவதானம் கிராமத்துக்கு அருகே உள்ள நகரகுளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவது தொடர்பாக வழக்கறிஞர் பால்வண்ணன் என்பவர் வருவாய் அலுவலரிடம் போனில் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், எம்.எல்.ஏ-வின்‌ ஆட்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக நகரக்குளத்தில் மண் அள்ளி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த வழக்கறிஞர் பால்வண்ணன், வருவாய் அலுவலரை போனில் தொடர்புகொண்டு, மீண்டும் புகார் தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், வழக்கறிஞர் பால்வண்ணனை தொடர்புகொண்டு அவரை சமாதானப்படுத்தும் வகையில் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் விருதுநகர் மாவட்டத்தில் வைரலாக பரவி வருகின்றன.

வழக்கறிஞர் பால்வண்ணன்

அதன்படி வழக்கறிஞர் பால்வண்ணன், வருவாய் அதிகாரி இடையிலான முதல் ஆடியோவில், வழக்கறிஞர் பால்வண்ணன், “ அந்த பெரியக்கோயிலுக்கு பக்கத்துல நகரக்குளத்துல 20 அடிக்கு மேல மண் அள்ளிட்டு இருக்காங்க, இதை என்னனு நீங்க கேட்கமாட்டீங்களா சார்? ஏற்கெனவே தாசில்தார், உங்களுக்கு எல்லாத்துக்கும் கலெக்டர் 3 தடவை புகார் அனுப்பி என்னனு பார்க்கச் சொல்லிருக்காங்க. நீங்க பார்க்கமாட்டீங்களா சார்? உயர் நீதிமன்றம் சொல்றதை கேட்கமாட்டீங்களா?” எனக் கேட்கிறார். அதற்கு வருவாய் அதிகாரி, “அதை கனிமவளத்துறை சொல்லி என்னனு பார்க்கச் சொல்றேன்” என்கிறார்.

உடனே வழக்கறிஞர், “அப்போ அதை தடுக்குறதுக்கான அதிகாரம் உங்களுக்கு கிடையாதா சார்? உங்ககிட்ட கேட்டா கனிமவளத்துறையை கைக்காட்டுறீங்க. கனிமவளத்துறையில கேட்டா டி.ஆர்.ஓ’னு உங்களை கைக்காட்டுறாங்க. இப்போ, இதை நீங்க சரி செய்வீங்களா இல்லையா சார்?” எனக் குமுறுகிறார்.

அதற்கு, “இப்படியெல்லாம் கோபப்பட்டு பேசினா உங்களுக்குத்தான் உடம்பு சரியில்லாம போகும் சார். கோர்டுல பிராக்டீஸ் செய்யுற உங்களுக்குத் தெரியாதா? கொஞ்சம் பொறுமையா இருங்க. நான்‌ என்னனு பார்க்கச் சொல்றேன்” என்கிறார் வருவாய் அதிகாரி. வழக்கறிஞர் தொடர்ந்து, “அப்போ இதே பதிலை கோர்டுல வந்து சொல்வீங்களா சார்? அங்க எல்லாம் பாஸ் இல்லாம ஓடிட்டு இருக்கு. என் குளத்துல 20 அடிக்கு மேல மண் அள்ளிட்டு போறாங்க. என் குளம் பாழா போயிட்டு இருக்கு. இதை என்னனு கேட்கமாட்டுக்குறீங்க. அப்போ கீழே இருந்து மேல வரைக்கும் எல்லாரும் காசு வாங்கிட்டீங்களா?” என கேட்கும் விதத்தில் முதல் ஆடியோ முடிவடைகிறது.

இரண்டாவதாக ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், வழக்கறிஞர் பால்வண்ணனை தொடர்புகொண்டு சமாதானப்படுத்தி பேசுகிறார். அதில், எம்.எல்.ஏ, “மண் அள்ளுறது சம்பந்தமா பேசியிருந்தீங்களா? அதை மேலே இருந்தே பேசிட்டு வாறாங்க. நம்ம மண்டபம் கட்டுறோம்ல அதுக்கு மண்ணும் செங்கல்லும் பாஸ் எடுத்தவங்ககிட்ட கேட்டுருந்தேன். அதுக்காக செய்றாங்க” எனக் கூறுகிறார். அதற்கு வழக்கறிஞர், “போனமுறை குளத்தை நிரவல்செய்து தர்றோம்னு சொன்னதையே இன்னும் யாரும் செய்யல அண்ணாச்சி. 3 அடிக்கு மேல தோண்டக்கூடாதுனு ரூல்ஸ் இருக்கு. ஆனா, 30 அடிக்கு மேல தோண்டிட்டு இருக்காங்க. அந்த ரோட்டுல அவ்ளோ டாரஸ் லாரி போனா ரோடு என்னத்துக்கு ஆகும்” என கேட்க உடனே, “சரி, தொழிலுக்காக ஹெல்ப் பன்றதா நினைச்சிக்கோங்க” என்கிறார் எம்.எல்.ஏ. அதையடுத்து வழக்கறிஞர், “என்ன தொழிலுக்காக, சம்பந்தப்பட்டவங்கள கலந்து எதும் பேசுனாங்களா? ஒரு பொதுநோக்கம் இல்லைனா என்ன நிர்வாகம் அண்ணாச்சி” எனச் சொல்ல, எம்.எல்.ஏ, “எம்.எல்.ஏ சொன்னா கேட்டுப்பீங்கனு நினைச்சேன். சரி, அதுக்குமேல என்னால எதும் பேச முடியாது” எனும் வகையில் முடிகிறது அந்த ஆடியோ.

இந்த ஆடியோ விவகாரம் ராஜபாளையம் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், ஆடியோ குறித்து எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனிடம் விளக்கம் கேட்டோம். “சூளைக்கு மண் அள்ளுவதற்காக முறைப்படி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணம் கட்டி குளத்தில் மண் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அதேஊரில் கல்யாண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே கட்டடப் பணிக்கு மண் தேவைப்படுகிறது, அதனால் குளத்தில் மண் எடுப்போரிடம் பேசி தளம் அமைக்க தேவைப்படும் மண்ணை தரச் சொல்லுமாறு அந்த ஊர்காரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

தங்கப்பாண்டியன்‌ எம்.எல்.ஏ.

இதுதவிர கட்டுமானச் செலவுக்காக 5 லட்ச ரூபாய் தருவதாகவும் நான் கூறியிருந்தேன். இந்த விஷயம் தொடர்பாக கான்ட்ராக்ட் காரர்களிடமும் உதவிக்கேட்டு பேசியிருந்தேன். இந்த விஷயமாகத்தான் வக்கீலுடன் பேசினேன். இதில் வேறெந்த குளறுபடிகளும் இல்லை” என்றார்.

குளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவது தொடர்பான புகார் குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமாரிடம் பேசினோம். “வழக்கறிஞர் பால்வண்ணன் சொன்ன புகார் குறித்து விசாரணை நடத்துமாறு கனிமவளத்துறை உதவி ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறைக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில்தான் அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து சொல்ல முடியும்” என முடித்துக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.