குப்பம்: ஆந்திராவில் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது குப்பம் தொகுதி. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 33 ஆண்டுகளாக இத்தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில் குப்பம் தொகுதிக்கு ஒருநாள் பயணமாக முதல்வர் ஜெகன்மோகன் நேற்று வந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெகன் பேசியதாவது:
சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியில், மத்திய அரசே தனது பேச்சை கேட்டுதான் நடப்பதாக மார்தட்டிக் கொண்டார். ஆனால் அவரது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் சாலைகள், குடிநீர், பாசன நீர் போன்ற அடிப்படை வசதிகளைகூட செய்து தரவில்லை. ஆனால் குப்பம் பகுதியில் விமான நிலையம் கொண்டு வருவேன் என மக்களை ஏமாற்றி வருகிறார்.
எங்கள் ஆட்சியில் 4 திட்டங்கள் மூலம் மகளிருக்கு நிதியுதவி அளித்துள்ளோம். வரும் 2024 ஜனவரி முதல் முதியோர் உதவித்தொகையை ரூ.2,750 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு 31 லட்சம் வீடுகள் கட்டி வழங்கும். எங்கள் ஆட்சியில் எங்கும் லஞ்சம் இல்லை. இடைத்தரகர்கள் இல்லை. நேரடியாக நிதியுதவி அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
கடந்த ஆட்சியில் முதல்வரின் தொகுதியில் கூட ஒரு வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. ஹந்திரி-நீவா குடிநீர் கால்வாய் திட்டப்பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிகள் வெறும் 6 மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும். மேலும் யாமிகானிபல்லி, மதனபல்லி பகுதிகளில் இந்த அரசு ரூ.250 கோடி செலவில் சிறிய அணை கட்டும் பணியை மேற்கொள்ளும். மேலும் குப்பம் மக்களுக்காக ரூ.120 கோடி செலவில் பாலாற்றில் ஆங்காங்கே தடுப்பணை விரிவாக்கப் பணிகள் நடைபெறும். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.
பாலாற்றில் தடுப்பணைகளை மேலும் உயர்த்தினால் தமிழகப் பகுதிகளுக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபடும் ஆபத்து உள்ளது. ஜெகனின் இந்த அறிவிப்பு பாலாறு பிரச்சினை மீண்டும் தலைதூக்க வழிவகுத்துள்ளது.