'வட இந்தியா vs தென் இந்தியா' : சிறப்பாகச் செயல்படுவதற்காக வஞ்சிக்கப்படுகிறதா தென்னிந்தியா?

சத்துணவு திட்டம்

Getty Images

சத்துணவு திட்டம்

கல்வி, சுகாதாரம், பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றில் இந்திய வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் சிறப்பான நிலையில் இருக்கின்றன. மத்திய அரசுக்கு கூடுதலாக வரியைச் செலுத்தும் தென் மாநிலங்கள் முன்னேறிய நிலையில் இருப்பதற்காக தண்டிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது புதிய புத்தகம் ஒன்று.

இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான நிதிப் பகிர்வு குறித்து தொடர்ந்து எழுதிவரும் சென்னையைச் சேர்ந்த புள்ளி விவர நிபுணரான ஆர்.எஸ். நீலகண்டன், வளர்ச்சி விகிதத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கும் வட இந்திய மாநிலங்களுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்தும், இந்த வித்தியாசத்தால் எழக்கூடிய பிரச்னைகள் குறித்தும் “South Vs North: India’s Great Divide” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையிலான முரண்பாட்டையும் வருவாய்ப் பகிர்வில் இருக்கும் பிரச்னைகளையும்தான் இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் ஒரு குழந்தை பிறப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை, தென்னிந்தியாவில் பிறப்பதற்குப் பதிலாக, வட இந்தியாவில் பிறப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். காரணம், தென்னிந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவு என்பதுதான்.

இதையும் மீறி அந்த குழந்தை தென்னிந்தியாவில் பிறந்தால், முதல் வருடத்திற்குள் இறப்பதற்கான அபாயம் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் குறைவு. அந்தக் குழந்தைக்கு தடுப்பூசி கிடைக்கும். பிரசவத்தில் தாயை இழக்கும் அபாயம் குறைவு. குழந்தைகளுக்கான சேவைகள், ஆரம்பகட்ட சத்தான உணவுகள் ஆகியவையும் கிடைக்கும்.

குழந்தைக்கு உடல் நலமில்லாமல் போனால், நல்ல மருத்துவமனையோ, மருத்துவர்களோ கிடைப்பார்கள் என்பதால், அந்த குழந்தை தனது ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாடும் வாய்ப்புகள் அதிகம்.

அந்தக் குழந்தை பள்ளிக்கூடத்திற்குப் போகும். நீண்ட காலம் பள்ளிப்படிப்பைத் தொடரும். கல்லூரிக்குப் போகும் வாய்ப்புகளும் அதிகம். ஒரு தொழில் என்ற வகையில் விவசாயத்திற்குப் பதிலாக, வேறு வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம். அந்த வேலையில் கூடுதல் சம்பளமும் கிடைக்கும்.

அந்த குழந்தை பெரியவளானதும், அதற்கு குறைவான குழந்தைகளே பிறக்கும். அந்தக் குழந்தைகள் கூடுதல் ஆரோக்கியத்துடன், தன் தாயைவிட அதிகம் படிக்கும். கூடுதலாக அரசியலில் பிரதிநிதித்துவம் செய்வதோடு, தேர்தலில் ஒரு வாக்காளராக அவர்களது தாக்கமும் அதிகமாக இருக்கும்.

புள்ளிவிவரம்

BBC

புள்ளிவிவரம்

சுருக்கமாகச் சொன்னால், தென்னிந்தியாவில் பிறக்கும் குழந்தை, வட இந்தியாவில் பிறக்கும் குழந்தையை விட ஆரோக்கியமாகவும் செல்வத்துடனும் பாதுகாப்பாகவும் சமூக ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாழ்க்கையை வாழக்கூடியதாகவும் இருக்கும்.

கல்வி, சுகாதாரம், பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றில் தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்குமான வித்தியாசம் என்பது ஐரோப்பிய நாடுகளுக்கும் சஹாராவுக்குக் கீழ் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான வித்தியாசமாக இருக்கிறது.

ஆனால், எல்லா காலகட்டத்திலும் இப்படி இருக்கவில்லை. 1947ல் இந்தியா சுதந்திரமடையும்போது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்திய மக்கள் தொகையின் கால் பகுதியினர் வசித்தார்கள். வளர்ச்சிக் குறியீடுகளில் மத்திய இடத்திலோ, கீழ் மட்டத்திலோ இருந்தார்கள்.

ஆனால், 1980களில் இருந்து மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டு தென் மாநிலங்கள் வளரத் துவங்கின. அந்தப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. ஒவ்வொரு தென் மாநிலத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமிக்க, புதுமையான கொள்கைகளை அறிமுகப்படுத்தியே இந்த வளர்ச்சியை அடைந்தன.

நீலகண்டன் எழுதிய புத்தகம்

BBC

நீலகண்டன் எழுதிய புத்தகம்

ஒரு மிகச் சிறந்த உதாரணம், தமிழ்நாட்டின் சத்துணவுத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பள்ளிச் சேர்க்கை அதிகரித்தது. இப்போது இந்தியாவிலேயே அதிக மாணவர் சேர்க்கையைக் கொண்டிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

பக்கத்து மாநிலமான கேரளாவில் கல்வியிலும் சுகாதாரத்திலும் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிக்கு, அந்த மாநிலத்தில் நிலவும் அரசியல் திரட்சியும் பலதரப்பட்ட கலாசாரமும் காரணம் என நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணரான அமர்தியா சென் கூறுகிறார். அரசியல் விஞ்ஞானியான பிரேரணா சிங் போன்றவர்கள், ஒரு மாநிலத்தின் வலுவான பிராந்திய அடையாளத்தை வலியுறுத்தும் துணை தேசியவாதம் இதற்கு முக்கியமான காரணம் என்கிறார்.

புள்ளிவிவரம்

BBC

புள்ளிவிவரம்

ஆனால், தென் மாநிலங்களின் வளர்ச்சி வேறு ஒரு பிரச்சனைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

வட இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் தென் மாநிலங்களின் மக்கள்தொகை குறைவுதான். பல தலைமுறைகளாக குறைந்த அளவு மக்கள் தொகை வளர்ச்சி இருந்ததே இதற்குக் காரணம்.

ஆனால், அவர்களிடம் இருக்கும் வளத்தின் காரணமாக அவர்கள் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில்தான் மத்திய அரசு நிதிப் பகிர்வைச் செய்கிறது என்பதால், மிக குறைவான அளவுக்கே நிதி தென் மாநிலங்களுக்குத் திரும்பக் கிடைக்கிறது. ஆகவே, தங்களுடைய வெற்றிக்காகவே அவர்கள் சபிக்கப்பட்டவர்களாகிறார்கள்.

சமீபத்தில் செய்யப்பட்ட வரி சீர்திருத்தங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டதாக பலர் கருதுகிறார்கள். முன்பு மாநிலங்கள் மறைமுக வரியின் மூலம் நிதி திரட்ட முடியும் என்பதால் தங்களுக்கான கொள்கைகளை வகுத்துக்கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் போன்றவை அப்படித்தான் செயல்படுத்தப்பட்டன. ஆனால், நாட்டை ஒரே சந்தையாக மாற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின் காரணமாக மாநிலங்கள் தங்கள் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகள் குறைந்திருக்கின்றன. மத்திய அரசு அளிக்கும் நிதியையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

“மாநிலங்கள் மாநகராட்சிகளைப் போல மாற்றப்பட்டுவிட்டன” எனக் குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு நிதியமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

இந்த நிலையானது, மத்திய அரசுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையிலான உறவில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

புள்ளிவிவரம்

BBC

புள்ளிவிவரம்

உதாரணமாக, 2020ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி பாக்கியை மத்திய அரசு கொடுக்க மறுத்தபோது, சில மாநிலங்கள் வழக்குத் தொடரப்போவதாக எச்சரித்தன. அதற்குப் பிறகே மத்திய அரசு மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுத்தது.

இந்த ஆண்டு தொடக்கத்திலும் எரிபொருள் விலையைக் குறைப்பதில், மத்திய – மாநில அரசுகள் மோதிக்கொண்டன. மாநில அரசுகள் வரியைக் குறைக்க வேண்டுமென்றபோது, பல தென் மாநில அரசுகள் அதனை ஏற்கவில்லை.

இந்தப் பிரச்னைக்கான தீர்வுகள் எளிதானவை அல்ல.

ஒரு பக்கம், உத்தர பிரதேசத்திலிருக்கும் ஒரு குடிமகனைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற அரசு சேவைகளும் நலத்திட்டங்களும் தனக்கும் கிடைக்க வேண்டுமென நினைக்கிறார்.

மற்றொரு பக்கம் தமிழ்நாட்டில் இருக்கும் குடிமக்கள், தங்களுடைய வரிப் பணத்தை தங்களுக்குச் செலவிடுவதற்குப் பதிலாக உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு கூடுதலாக அனுப்ப வேண்டியிருக்கிறது.

சைக்கிளில் செ்ல்லும் மாணவிகள்

Getty Images

சைக்கிளில் செ்ல்லும் மாணவிகள்

2026ல் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்படும்போது, தென் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும். ஏற்கெனவே வருவாய் இழப்பு, தங்களுக்கான கொள்கைகளை தாங்களே வகுக்க முடியாமல் இருப்பது போன்றவற்றோடு போராடிவரும் தென் மாநிலங்கள், இந்த மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் அவற்றுக்கான இடங்களும் குறையப்போகின்றன.

இந்தியா தற்போது சந்திக்கும் ‘வடக்கு VS தெற்கு’ பிரச்சனைக்கு, தேசிய அளவிலான திட்டமிடுதல்களே காரணம் என்கிறார் புள்ளிவிவர நிபுணரான ஆர்.எஸ். நீலகண்டன்.

“1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், முதல் இரண்டு தசாப்தங்கள் திட்டமிடுதல்கள் தேசிய அளவில் நடந்தன. தற்போது ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விகிதத்தில் வளர்கின்றன. ஆனால், காலம் செல்லச்செல்ல வளர்ச்சி ஒரே மாதிரி இருக்கும் என அப்போது கருதப்பட்டது.

ஆனால், என்ன நடந்ததென்றால், வளர்ந்த மாநிலங்கள் ஒரு பகுதியாகவும் வளர்ச்சியடையாத மாநிலங்கள் ஒரு பகுதியாகவும் பிரிந்து நிற்கின்றன. ஒரே மாதிரியான வளர்ச்சி என்பது இல்லாமல், வெவ்வேறு விதமான வளர்ச்சிப் போக்குகள் இப்போது இந்தியாவில் நிலவிவருகின்றன. திட்டமிடுதலின் அடிப்படையே தவறாகிவிட்டது” என்கிறார் நீலகண்டன்.

தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களின் தேவை என்பதால், திட்டமிடுதல் என்பது மாநில மட்டத்தில் நடக்க வேண்டும் என்கிறார் நீலகண்டன்.

“உதாரணமாக, ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடத்தில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை என்பது குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்துகொண்டே வருவதுதான் இதற்குக் காரணம். பிற மாநிலங்களில் இது வளர்ந்துகொண்டே போகிறது. ஆகவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதிதாக பள்ளிக்கூடங்களைக் கட்ட வேண்டிய தேவை என்பது இல்லாமல்போகிறது. இந்த நிலையில், வட மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதிதாக பள்ளிக்கூடங்களைக் கட்டித்தர திட்டமிட்டால், நமக்கு அது தேவைப்படாது. நம்முடைய தேவை ஏற்கெனவே உள்ள பள்ளிக்கூடங்களை இன்னும் மேம்படுத்திக்கொண்டே செல்வதுதான்.

நீலகண்டன்

BBC

நீலகண்டன்

ஆகவே, கல்விக்காக திட்டமிடும்போது தென் மாநிலங்களுக்கு வேறு மாதிரியும் வட மாநிலங்களுக்கு வேறு மாதிரியும் திட்டமிட வேண்டும். வட மாநிலங்களைப் பொறுத்தவரை, குழந்தைகளை அதிகமாக பள்ளியில் சேர்ப்பது எப்படி எனத் திட்டமிட வேண்டும். தென் மாநிலங்களைப் பொறுத்தவரை தரமான கல்வியை அளிப்பதற்குத் திட்டமிட வேண்டும். வெளிவரும் மாணவர்களின் தரத்தை மேம்படுத்துவதில் திட்டமிட வேண்டும். மாறாக, எல்லோருக்கும் சேர்த்து தேசிய கல்விக் கொள்கை என ஒரே கொள்கையைக் கொண்டுவந்தால், அதில் பலன் இருக்காது” என்கிறார் அவர்.

“அமெரிக்காவுக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் ஒரே கொள்கை உதவாது”ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்யேகமான நிதித் தேவைகள் இருக்கின்றன. அதற்கேற்றபடி, நிதிப் பகிர்வு நடக்க வேண்டும் என்கிறார் நீலகண்டன்.

“சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால், தாய் – சேய் நலக் குறியீடுகள்தான் அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு குறித்து கூறுகின்றன. இதற்கு நல்ல ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவை. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இவை சிறப்பாக அமைக்கப்பட்டுவிட்டன. கேரளாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 5 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. இது அமெரிக்காவில் உள்ள இறப்பு விகிதம். ஆனால், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 48 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. இது ஆப்கானிஸ்தானில் உள்ள இறப்பு விகிதம். ஆகவே, ஒரே கொள்கையின் மூலம் அமெரிக்காவின் தேவையையும் ஆஃப்கானிஸ்தானின் தேவையையும் நிறைவேற்ற முடியாது.

தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் தொகையினருக்கு வயதாகி வருகிறது. அவர்களுக்கு முதியவர்களுக்கான மருத்துவ உதவிகள்தான் தேவை. நீரிழிவு போன்ற நோய்களுக்கு மருத்துவ உதவி தேவை. இதற்கெல்லாம் அதிக நிதி தேவைப்படும். ஆகவே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டிய நிதி நிச்சயம் வேறுபடும்” என்கிறார் அவர்.

சத்துணவு திட்டம்

Getty Images

சத்துணவு திட்டம்

மேலும் தற்போது நிதிப் பகிர்வுக்குப் பயன்படுத்தப்படும் முறைகள் தென் மாநிலங்களை வஞ்சிக்கின்றன என்கிறார் நீலகண்டன்.

“நாம் செலுத்தும் வரி என்பது முதலில் மத்திய அரசுக்குச் செல்கிறது. இதற்குப் பிறகு நிதிக் கமிஷன் வழியாகவும் மத்தியத் திட்டங்கள் வழியாகவும் நிதி நல்கைகள் வழியாகவும் மாநிலங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படுகிறது. இதில் நிதி கமிஷன் மூலமாக பகரப்படும் நிதி என்பதுதான் மிக முக்கியமானது.

1976ல்தான் புதிய மக்கள்தொகைக் கொள்கை வகுக்கப்பட்டது என்பதால், 14வது நிதி கமிஷன் வரை, 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்புதான் நிதிப் பகிர்வுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் 15வது நிதி கமிஷன் வரும்போது, 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை மனதில் கொண்டு நிதிப் பகிர்வைச் செய்வோம் என்றார்கள்.

இதற்கு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, மக்கள் தொகை கட்டுப்பாட்டை எப்படி செயல்படுத்தினார்கள் என்பதும் கணக்கில்கொள்ளப்படும் என்றார்கள். ஆனால், இந்த மக்கள்தொகை கட்டுப்பாட்டு விகிதத்தை 1971லிருந்து கணக்கில் கொள்ளாமல் 2011ஆம் ஆண்டிலிருந்து கணக்கில் கொள்கிறார்கள்.

கேரளாவைப் பொறுத்தவரை 1971 முதல் 2011வரை மக்கள் தொகை வளர்ச்சி 56 சதவீதம்தான் இருக்கிறது. ஆனால், ராஜஸ்தானில் இதே காலகட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 166 சதவீதமாக இருக்கிறது. 1971ல் கேரளாவும் ராஜஸ்தானும் மக்கள் தொகையைப் பொறுத்தவரை, ஏறத்தாழ ஒரே இடத்தில் இருந்தன. இப்போது கேரளாவின் மக்கள் தொகை 33 மில்லியன்களாக இருக்கும்போது ராஜஸ்தானின் மக்கள் தொகை 70 மில்லியன்களாக உயர்ந்திருக்கிறது. நமக்கு ஏற்கனவே அதிக நிதி தேவைப்படும் நிலையில், நிதி குறைவாகக் கொடுக்கப்படுகிறது” என்கிறார் அவர்.

தவிர, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களுக்கு மத்திய அரசு நேரடியாகத் திட்டங்களைத் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்வதும் தவறு என்கிறார் நீலகண்டன்.

“மத்திய அரசு நேரடியாகத் திட்டங்களைச் செயல்படுத்தினால் பிரச்சனைகள்தான் அதிகரிக்கும். கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்பது, 3.81லட்சம் கோடி ரூபாய். இதில் பல திட்டங்கள் மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள துறைகளுக்காகச் செய்யப்படுபவை. இந்தத் திட்டங்களை மத்திய அரசு ஏன் செயல்படுத்துகிறது?

இப்படி மத்திய அரசு தேசியக் கொள்கைகளை வகுத்து, அதனை ஏற்றால்தான் நிதி ஒதுக்கப்படும் என்று கூறினால், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அந்த கொள்கையை ஏற்றுக்கொண்டுதான் நிதியைப் பெற வேண்டும். ஆனால், அந்தக் கொள்கை இந்த மாநிலங்களின் நலன்களுக்கு முரணானதாக இருக்கிறது. இது மிகக் கொடுமையான விஷயம்.” என்கிறார் அவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை வைத்துத்தான் நாம், நம்முடைய கோரிக்கைகளை வலியுறுத்த முடியும். ஆனால், 2026 மறுசீரமைப்பில் தென் மாநில எம்பிக்களின் எண்ணிக்கை மிகவும் குறையும்போது அந்த மாநிலங்களால் எதுவுமே செய்ய முடியாது என்கிறார் நீலகண்டன்.

South VS North புத்தகத்தை எழுத என்ன காரணம்?

“பல வருடங்களாக கேரளா மாடல் என்பது பேசப்பட்டு வருகிறது. ஒரு பிரபலமான, வளர்ச்சி மாதிரியாகவும் பலரும் அது குறித்து எழுதிவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி குறித்து பெரிதாக எழுதப்படவில்லை. தவிர, மக்கள்தொகை வளர்ச்சியால், திட்டமிடுதலில் ஏற்பட வேண்டிய மாறுதல்கள் குறித்தும் அதிகம் எழுதப்படவில்லை. கல்வி, சுகாதாரம் போன்றவற்றைத் திட்டமிடும்போது மக்கள்தொகையில் உள்ள வேறுபாடுகள் மிக முக்கியமானவை. அவற்றை விவாதத்திற்குக் கொண்டுவரவே இந்தப் புத்தகத்தை எழுதினேன்” என்கிறார் நீலகண்டன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.