ஆமதாபாத் :”அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயல்படும் நகர்ப்புற நக்சல்களால், நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. குஜராத்தில் சுற்றுச்சூழல் பிரச்னையை காரணம் காட்டி, சர்தார் சரோவர் அணையை கட்ட விடாமல் இவர்கள் தான் முட்டுக்கட்டை போட்டனர்,” என, பிரதமர் மோடி பேசினார். குஜராத்தின் நர்மதாமாவட்டத்தில் அனைத்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக செயல்படுவோரும், நகர்ப்புற நக்சல்களும் இணைந்து அரசியல்வாதிகளின் ஆதரவுடன், குஜராத்தின் நர்மதை ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
முட்டுக்கட்டை
அணை கட்டினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, நீண்ட காலமாக அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். அணை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால், பல கோடி ரூபாய் வீணானது.இப்போது அணை கட்டி முடித்ததும், அவர்கள் செய்த பிரசாரம் எவ்வளவு பொய்யானது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இப்போது அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையும், பூங்காக்களும், அதை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றியுள்ளன.
6,500 விண்ணப்பங்கள்
சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு தடை ஏற்படுத்திய நகர்ப்புற நக்சல்கள் இன்னும் பல மாநிலங்களில் தீவிமாக செயல்படுகின்றனர். பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன், வளர்ச்சி திட்டங்களுக்கு அவர்கள்முட்டுக்கட்டை போடுகின்றனர். மாநிலங்களின் சுற்றுச் சூழல் துறை அமைச்சர்கள்இவர்களிடம் மிக கவனமாக செயல்பட வேண்டும். வாழ்க்கையை எளிதாக்குவது, தொழில் செய்வதை எளிதாக்குவது ஆகியவற்றை நோக்கமாக உடைய திட்டங்கள், இவர்களால் முடங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதிஅளிக்கும் விஷயத்தில் மாநில அரசுகள் கவனமாக செயல்பட வேண்டும்.நகர்ப்புற நக்சல்களின் சதி திட்டங்களை அறிந்து, அவற்றுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதில் தாமதம் கூடாது.பல்வேறு திட்டங்களுக்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி, 6,000 விண்ணப்பங்களும், வனத்துறையின் அனுமதி கோரி, 6,500 விண்ணப்பங்களும் பல்வேறு மாநிலங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன.இதுபோன்ற தாமதங்கள்,திட்டங்களுக்கான செலவை அதிகரித்து விடும். எனவே, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை குறைக்க வேண்டும்.
வளர்ச்சிக்கு தடை
உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என உறுதியாக தெரியும் திட்டங்களின் விண்ணப்பங்களை மட்டும் நிலுவையில் வைக்கலாம். சமீபத்தில் புதுடில்லியில் பிரகதி மைதான சுரங்கப் பாதை அமைக்கப்பட்டதன் வாயிலாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 55 லட்சம் லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும். இதனால் கார்பன் வெளியேற்றமும் குறையும். இவ்வாறு அவர் பேசினார். நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, தன்னார்வ அமைப்பினர் போர்வையில் போராட்டம்நடத்தி வளர்ச்சி திட்டங்களுக்கு தடை ஏற்படுத்துவோர், நகர்ப்புற நக்சல்கள்என அரசியல் கட்சி தலைவர்களால் அழைக்கப்படுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement