கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெறலாம் என்று பாஜகவின் மிதுன் சக்ரவர்த்தி கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அரசியல் திருப்பம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். அங்கு ஆட்சியில் இருந்த கூட்டணி அரசில் இருந்து ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் வெளியேறினர்.
கட்சியில் 3இல் இரு பங்கிற்கு மேலான எம்எல்ஏக்கள் அவருடன் சென்றதால் கட்சி தாவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் அங்கு நடந்த கூட்டணி ஆட்சி 2.5 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
மகாராஷ்டிரா
மகா விளாஸ் கூட்டணி ஆட்சி கவிழக் காரணமாக இருந்த ஷிண்டே ஆதரவாளர்கள் பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியை அமைத்தனர். ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்ற நிலையில், பாஜக- ஷிண்டேவின் சிவசேனா இணைந்து அங்கு ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து கோவாவிலும் கூட இதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்கிருந்த 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 8 பேர் பாஜகவில் ஐக்கியமாகினர்.
மேற்கு வங்கம்
இதனிடையே மேற்கு வங்கத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடைபெறலாம் என பாஜகவின் மிதுன் சக்ரவர்த்தி கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. அதேநேரம் வெறும் 3 இடங்களுடன் தேர்தலில் களமிறங்கிய பாஜக 77 இடங்களைக் கைப்பற்றியது.
அடுத்த குறி
அங்கு திரிணாமுல் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ நடவடிக்கைகள் கடுமையாகி உள்ளன. முன்னதாக நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்ரவர்த்தி ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் 21 எம்எல்ஏக்கள் தன்னுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகக் கூறி இருந்தார். இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மிதுன் சக்ரவர்த்தி, திரிணாமுல் தலைவர்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பது உண்மை என்றும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
கொஞ்சக் காலம்
அவர் கூறுகையில், “21 திரிணாமுல் எம்எல்ஏக்கள் இன்னும் கூட என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.. கொஞ்சக் காலம் பொறுத்து இருங்கள்.. பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறும். திரிணாமுல் தலைவர்களை பாஜகவில் இணைப்பதில் எங்கள் கட்சியில் உள்ளவர்களுக்கே அதிருப்தி இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதேநேரம் நல்ல நபர்களை பாஜகவில் இணைத்துக் கொள்வோம்.
திரிணாமுல் எம்எல்ஏக்கள்
திரிணாமுல் எம்எல்ஏக்கல் எத்தனை பேர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால், 21 எம்எல்ஏக்களுக்கு குறையாமல் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு திரிணாமுல் ஆட்சியின் மீது அதிருப்தி உள்ளது. விரைவில் காட்சிகள் மாறும். நீங்களே அதைப் பார்க்கத் தானே போகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
பயப்பட வேண்டாம்
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக மம்தா குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், இது தொடர்பாகப் பேசிய அவர், “அவர் என்ன சொல்ல வருகிறார். பிரதமர் இதையெல்லாம் செய்வதாகச் சொல்கிறாரா? நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாம் என்ன செய்ய முடியும்? நீங்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை என்றால் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கலாம்.. ஒன்னும் ஆகாது. தவறு செய்தால் மட்டுமே பயப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.