ஏற்கெனவே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்கிற சபரி, மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, நான்காவதாக ஓர் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்ய முயன்றபோது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அந்த பரபர சம்பவத்தின் சூடு தணிவதற்குள், அதே பாணியில் பலரை திருமணம் செய்து, அவர்களிடம் பணம் பறித்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள வெங்கரை அடுத்த கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு 35 வயதாகிறது. இந்த நிலையில் இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி புதன்கிழமையன்று, கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரை அம்மன் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்திருக்கிறது. அந்தத் திருமணத்தின்போது, தனபால் தரப்பிலிருந்து உறவினர்கள் பலரும் வருகைதர, சந்தியா தரப்பில் பெரிதாக உறவினர்கள் யாரும் வரவில்லையாம்.
அந்த திருமணத்தில் பெண் வீட்டுத் தரப்பில் சந்தியாவின் சகோதரி, மாமா எனக்கூறி இருவரும், மதுரையைச் சேர்ந்த பெண் சம்பந்தப்பட்ட திருமண புரோக்கர் பாலமுருகன் என மூன்று பேர் மட்டுமே கலந்துகொண்டிருக்கின்றனர். இதனால், சந்தேகமடைந்த தனபால், “என்ன உங்க வீட்டுல இவ்வளவு பேர்தான் வந்திருக்காங்க. உறவினர்கள் யாரும் வரவில்லையே” என்று கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு சந்தியா, “எங்க உறவினர்களுக்கும், எங்களுக்கும் பிரச்னை. எங்களுக்கு என்று ஆதரவா யாரும் இல்லை. உங்களை மட்டுமே உறவா நினைச்சு இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இனி, நீங்க மட்டும்தான் என் உலகம், உறவினர்” என்று கண்ணைக் கசக்கியபடி சொல்ல, தனபால் உருகிபோயிருக்கிறார்.
இந்த நிலையில், திருமணத்தை முடித்துவிட்டு பெண் புரோக்கர் பாலமுருகன் திருமண கமிஷன் தொகையாக ரூ.1,50,000-த்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டனர். சந்தியா மட்டும் தனபாலோடு புதுவாழ்க்கையை தொடங்க, அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
அதற்கு பிறகு நடந்ததெல்லாம் அதிர்ச்சிகர சம்பவங்கள்தான்… தொடர்ந்து என்ன நடந்ததென நம்மிடம் விவரித்த போலீஸார், “தன்னையே நம்பி வந்திருக்கும் சந்தியாவுடன் நன்றாக வாழ வேண்டும்’னு நினைச்ச புது மாப்பிள்ளை தனபால், 8-ம் தேதி சந்தியாவுடன் ஒன்றாக தூங்கச் சென்றிருக்கிறார். ஆனால், மறுநாள் காலை எழுந்ததும், பக்கத்தில் சந்தியாவைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடிய அவர், அக்கம் பக்கத்திலும் விசாரித்திருக்கிறார். ஆனால் எங்கும் சந்தியாவையும் காணவில்லை, அதனால் அவர் போனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது, சந்தியாவின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.
இதனால், சந்தேகமடைந்த தனபால், வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்தபோது, திருமணப் பட்டு புடவை, சந்தியா கொண்டு வந்த துணிமணிகள் அனைத்தும் காணாமல் போக, தனபாலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு திருமணம்செய்ய பெண் தேடியபோது, வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்திருக்கிறது. அந்தத் தகவல் தனபாலுக்கு வந்திருக்கிறது. இதனால், உடனடியாக உஷாரான தனபால், அந்த நபரை எச்சரித்ததோடு, சந்தியாவை கையும் களவுமாக பிடிக்க திட்டம் போட்டார். அந்த நபர் மூலமாக திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கவைத்து, மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி, மணமகனின் போட்டோவை புரோக்கரிடம் கொடுத்திருக்கின்றனர்.
அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது எனப் பேசி போன் மூலமே முடிவு செய்திருக்கிறார் அந்த பெண் புரோக்கர். இந்த நிலையில், நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்திருக்கின்றனர். அதனால், நேற்று விடியற்காலை ஆறு மணிக்கு சந்தியா, தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோர் டாட்டா ஜஸ்ட் காரில் திருச்செங்கோடு வந்திருக்கின்றனர். அப்போது அங்கிருந்த தனபால் மற்றும் அவர் உறவினர்கள் சேர்ந்து, அங்கு வந்த சந்தியாவை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு, தங்களிடம் சிக்கிய சந்தியா மற்றும் பெண் புரோக்கர், உறவினர் என மூவரையும் தனபால், பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதோடு, சந்தியா உள்ளிட்ட குற்றவாளிகள் வந்த காரையும் பறிமுதல் செய்திருக்கிறோம். அதன்பிறகு, எங்கள் விசாரணையில், மதுரையைச் சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.
இது ஏழாவதாக நடக்க இருந்த திருமணம் என்பது தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின்போதும், ‘புரோக்கர் கமிஷன்’ என லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, இரண்டு நாள்வரை மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகிவிட்டு, கணவன் இரவில் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும்போது ,உடைமைகளை எடுத்துக்கொண்டு கம்பி நீட்டுவதை சந்தியா வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஒரே புரோக்கர் என்றால் பிரச்னை வரும் என்பதால், புதுபுது புரோக்கர்கள் மூலம் இப்படி ஓர் ஏமாற்று வித்தையை சந்தியா அரங்கேற்றி வந்திருக்கிறார். இப்போது, தனபால் புண்ணியத்தில் சிறைக்குள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்றார்கள்.