சென்னை: 2001ல் அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.
தமிழில் மிக முக்கியமான இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.
45வது பிறந்தநாள் கொண்டாடும் ஏஆர் முருகதாஸ்
2001ல் அஜித், லைலா, சுரேஷ்கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிறது தீனா திரைப்படம். அஜித்துக்கு முதன்முறையாக தல என்ற பட்டம் கிடைத்தது இந்தப் படத்தில் தான். மீசை இல்லாத ரவுடியா என்ட்ரி கொடுக்கும் அஜித், படத்தின் இறுதிவரை ஆக்சனில் அமர்க்களப்படுத்தியிருப்பார். லோக்கல் ரவுடியாக அஜித்தை நடிக்க வைத்து, அவரது ரசிகர்களுக்கு அன்லிமிட்டெட் ஆக்சன் விருந்து கொடுத்து பரவசப்படுத்தினார் ஏஆர் முருகதாஸ். அப்படியொரு தரமான மாஸ் டைரக்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏஆர் முருகதாஸ், இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஒன்லி சூப்பர் ஸ்டார்ஸ்களுடன் மட்டுமே கூட்டணி
தீனா படத்தில் அஜித்தை நடிக்க வைத்து இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ், இரண்டாவது படத்திலேயே விஜயகாந்துடன் ரமணா படத்தில் இணைகிறார். எப்போதுமே ஆக்சனில் அதகளம் செய்யும் விஜயகாந்தை, ஆர்ப்பாட்டமில்லாமல் நடிக்க வைத்து மாஸ் காட்டினார் ஏஆர் முருகதாஸ். போலீஸ் யுனிஃபார்மில் பார்த்துப் பழகிப் போன விஜயகாந்தை, ரமணா படத்தில் ப்ரொஃபசராக பட்டைத் தீட்டியிருப்பார். அதனைத் தொடர்ந்து சிரஞ்சீவி, சூர்யா, அமீர்கான், விஜய், மகேஷ் பாபு, ரஜினி என ஏஆர் முருகதாஸ் இயக்கிய நடிகர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலை துணிந்து பேசிய ஏஆர் முருகதாஸ்
தீனா, கஜினி, துப்பாக்கி, தர்பார் என கமர்சியல் படங்களில் வெரைட்டி காட்டிய ஏஆர் முருகதாஸ், அரசியல் பேசுவதிலும் கெத்து காட்டினார். ரமணா, கத்தி, சர்கார் ஆகிய படங்களில் அரசியலைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, கமர்சியலாக கதை சொன்ன ஏஆர் முருதாஸின் மேக்கிங் அவரது தனித்துவமாக அமைந்தது. அதிகபட்சமாக விஜய்யுடன் துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று படங்களில் பணிபுரிந்துள்ளார். நான்காவதாக விஜய்யுடன் கமிட் ஆன படம் சில காரணங்களால் மிஸ்ஸாகிப் போனது.
சர்ச்சைகளைக் கடந்து மீண்டு வரட்டும்
ஏஆர் முருகதாஸின் படங்கள் எந்தளவுக்கு வெற்றிப் பெற்றதோ, அதேயளவு கதை திருட்டிலும் சிக்கி சர்ச்சையானது. பலிவுட்டில் கஜினி படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நூறு கலெக்ஷனை கொடுத்தவர் ஏஆர் முருகதாஸ். ஆனால், கதை திருட்டு விவாகரம் அவரை தொடர்ந்து சுற்றிவர, இப்போது முன்னணி நடிகர்களின் படங்களை இயக்க முடியாமல் தவித்து வருகிறார். எதுவும் நிரந்தரமில்லை என்பதைப் போல ஏஆர் முருகதாஸை சுற்றியுள்ள சர்ச்சைகள் கடந்து, விரைவில் பிரம்மாண்ட வெற்றியோடு திரும்பி வரவேண்டும் என அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.