பானாஜி: கடந்த ஆண்டு நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில், தேர்தல் செலவுகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
கோவா மாநிலத்திற்கு கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் முயற்சி எடுத்து தீவிர தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டன.
கோவா சட்டமன்ற தேர்தல்
ஆம் ஆத்மி கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் வேலைகளில் அனல் பறக்க ஈடுபட்டு இருந்தாலும் முடிவுகள் என்னவோ அக்கட்சிகளுக்கு பலத்த அடியாக அமைந்தது. 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் 28 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், கோவா சட்டமன்ற தேர்தலுக்கு கட்சிகள் எவ்வளவு செய்தன என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
திரிணாமுல் கட்சி அதிக செலவு
அதன்படி, அதிக தொகையை செலவிட்டு இருக்கும் கட்சிகளின் பட்டியலில் திரிணாமுல் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செலவிட்ட தொகை மட்டும் ரூ. 47.5 கோடியாகும். மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக ரூ. 17.75 கோடி செலவிட்டுள்ளது. அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 3.5 கோடியை செலவிட்டுள்ளது. தேர்தலில் செலவிட்ட தொகையின் விவரங்களை அண்மையில் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தது.
தீவிர தேர்தல் பிரசாரம்
இந்த விவரங்களை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பாஜகவை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்றியே தீர வேண்டும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி ரூ. 12 கோடியை செலவிட்டுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கோவாவில் 11 வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா 25 லட்சம் செலவிட்டுள்ளது. 10 வேட்பாளர்களை நிறுத்திய சிவசேனா தேர்தல் செலவினங்களாக ரூ. 92 லட்சம் செலவிட்டுள்ளது.
ஒரு தொகுதியில் கூட வெற்றி இல்லை
இந்த தேர்தலில் அதிக செலவினம் செய்த கட்சிகளின் பட்டியலில் திரிணாமுல் காங்கிரஸ் முதல் இடம் பெற்றிருப்பது பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. கோவாவில் தடம் பதிக்கும் முயற்சியுடன் பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் பணிகளை முன்னெடுத்தது. 23-தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதேவேளையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 13 தொகுதிகளில் போட்டியிட்ட மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 2 தொகுதிகளில் வென்றது.
காங்கிரஸ் 11 தொகுதி
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 39 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் நோக்கத்தில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக விமர்சனத்தை முன்வைத்த காங்கிரஸ் 11 இடங்களில் வென்றது. ஆனால், இதில் எதிர்க்கட்சித் தலைவர் உள்பட 8 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.