புதுடெல்லியில் உள்ள உத்தம் நகரில் வசித்து வந்தவர் அங்கித் குமார் ஜா (27). இவர் விமானப்படையில் அதிகாரியாக பணி செய்ய தேர்ச்சி பெற்று இருந்தார். இதையடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான தொழில்நுட்ப கல்லூரியில் அங்கித் பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி கல்லூரி விடுதி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அங்கித் குமார் ஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அறிந்ததும் ஜாலஹள்ளி போலீசார் அங்கு சென்று அங்கித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அங்கித் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் 6 அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு இருந்ததாகவும், அந்த அதிகாரிகள் தனக்கு தொல்லை கொடுத்தனர் என்று எழுதி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கங்கமனகுடி போலீசார் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் ஏர் கமாண்டர், குரூப் காப்டன் மற்றும் விங் கமாண்டர் பொறுப்புகளில் இருப்பவர்கள். அங்கித்துக்கு எதிராக பயிற்சி அதிகாரி உள்பட சிலர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அங்கித் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்கொலையாக இருந்தாலும், கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்றோருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக செல்போன் அழைப்புகளை அங்கித் எடுக்காததால், குடும்பத்தினர் கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது சகோதரனுக்கு அனுப்பிய குறுந்தகவலில் ஏதேதோ ஆவணங்களைக் காட்டி அதில் கையெழுத்திடச் சொல்கிறார்கள் என்று அனுப்பியிருந்ததையும் போலீசார் கவனத்தில் எடுத்துள்ளனர்.