மாஸ்கோ : ரஷ்யாவில் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்து விடுவர் என்ற பயத்தில், இளைஞர்கள் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு தப்பி ஓடுகின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது பிப்., 24ல் ரஷ்யா தாக்குதலை துவக்கியது. ஏழு மாதங்கள் ஆகியும் போர் நீடித்து வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யா கைப்பற்றிய பல பகுதிகளை மீட்டுள்ளது.இதனால், உக்ரைனை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்ட ரஷ்யாவின் கனவு நனவாவதில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனை கைப்பற்றும் வரை போர் நீடிக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். கூடுதலாக மூன்று லட்சம் ரஷ்ய இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்க இருப்பதாக சமீபத்தில் புடின் அறிவித்தார். ஆனால், ‘யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். ராணுவத்தில் பணியாற்றியோருக்கு அழைப்பு விடுக்கப்படும்’ என, ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார்.
இருப்பினும், ரஷ்ய அதிபர் புடினின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரஷ்ய இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு செல்கின்றனர். கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்காசிய எல்லையில் அமைந்துள்ள ஜார்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்து காத்திருக்க தேவையில்லை.
அங்கே சென்று உடனடி விசா வாங்கிக் கொள்ளலாம். ரஷ்யாவில் இருந்து சாலை வழியாகவே ஜார்ஜியாவுக்கு செல்ல முடியும். இதனால் ரஷ்யா – -ஜார்ஜியா எல்லையில் வாகனங்கள் குவிந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் எச்சரிக்கை
ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:உக்ரைனிடம் சரண் அடையும் ரஷ்ய வீரர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். வீரர்கள் தங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்ற வேண்டும். உத்தரவை நிறைவேற்ற மறுத்தாலோ, எதிரிகளை தாக்க மறுத்தாலோ, உக்ரைனிடம் தானாக சரண் அடைந்தாலோ கடும் தண்டனை வழங்கப்படும். சரண் அடைபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உக்ரைனிடம் சரண் அடையும் ரஷ்ய வீரர்கள், பொதுமக்களைப் போல கவுரவமாக நடத்தப்படுவர்,” என கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement