தேனி பழைய அரசு மருத்துவமனை ரோட்டைச் சேர்ந்தவர் சினேகன்(14). இவர் தேனி மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவர் இரண்டு முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாக்ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அதிக குளிர் கடலான வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கிலோ மீட்டர் தூரத்தை ஃப்ரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க முடிவெடுத்தார்.
இதற்காக செப்டம்பர் 2-ம் தேதி வடக்கு அயர்லாந்து சென்ற மாணவர் 12 முதல் 15 டிகிரி வரை குளிர்ந்த கடலில் 10 நாள்கள் பயிற்சியாளர் விஜயகுமார் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்றார். இதையடுத்து செப்டம்பர் 20-ம் தேதி அந்நாட்டின் நீச்சல் பயிற்சியாளர்களுடன், பாதுகாப்புடன் கடலில் நீந்தினார். அந்நாட்டின் நேரப்படி செப்டம்பர் 21 காலை 6.30 மணிக்கு துவங்கி வட அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரையிலான 35 கிலோ மீட்டர் தூரத்தை மொத்தம் 14.39 மணி நேரம் நீந்திக் கடந்தார்.
இதுகுறித்து நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் பேசினோம். ’’18 வயதுக்குக் கீழ் யாரும் இந்தக் கடலில் நீந்தாத நிலையில் சினேகன் இச்சாதனையை செய்துள்ளார். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் இந்தக் கடலில் நீந்தியுள்ளார். இதையடுத்து சினேகன் இந்தக் கடலில் நீந்த முடிவெடுத்தபோது அயர்லாந்து அரசு 14 வயது மாணவன் நீந்துவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சினேகன் ஏற்கெனவே பாக்ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை படைத்தது குறித்து தெரிவித்தவுடன் ஒப்புக்கொண்டார்கள். பிறகு அவர்களே மிகுந்த ஆர்வத்துடன் சினேகனுக்கு பாதுகாப்பும், பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
உலகின் முக்கிய கடல் பகுதிகள் உள்ளன. அதில் இந்தியா டு இலங்கை முடித்துவிட்டோம். தற்போது அயர்லாந்து டு ஸ்காட்லாந்து முடித்துள்ளோம். இதையடுத்து ஸ்பெயின் டு இங்கிலாந்து இடையே உள்ள கடலில் நீந்த திட்டமிட்டுள்ளோம். இளவயதில் மிகக்குளிரான கடலில் நீந்திய சினேகனைப் பாராட்டி அயர்லாந்து அரசு சாதனை விருது வழங்கியுள்ளது. இதேபோல உலகில் உள்ள பிற நான்கு கடல் பகுதிகளில் நீந்தினால், யாரும் செய்திடாத சாதனையை சினேகன் செய்துவிடுவார்’’ என்றார்.