'அரை மணி நேரம் போதும்..!' – திமுகவுக்கு அண்ணாமலை வார்னிங்!

“தேசத்திற்கு எதிராக இருக்கக் கூடிய சக்திகளை கட்டுக்குள் கொண்டு வர பாஜக தொண்டர்களுக்கு அரை மணி நேரம் போதும்,” என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

சென்னை தாம்பரத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அக்கட்சி மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:

தேசிய புலனாய்வு அமைப்பும் மாநில காவல் துறையும் இணைந்து நாடு முழுவதும் சோதனை நடத்தி ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ எனும் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 105 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இரு தினங்களாக பாஜக தொண்டர்கள் அவர்களின் சொத்துகள், பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இன்று காலை வரை கோவையில் மட்டும் பாஜக அலுவலகம் உட்பட 12 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.ராமநாதபுரம் திண்டுக்கல் கடலுார் செங்கல்பட்டு திருப்பூரில் தலா ஒரு இடத்திலும்; ஈரோட்டில் இரண்டு என மொத்தம் 19 இடங்களில் பாஜக தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ். ஹிந்து முன்னணி அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தேச விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை ஏற்க முடியாது. இதற்கு பாஜக தொண்டர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும் என்பதை தமிழக அரசு நினைத்து பார்க்க வேண்டும். தேசத்திற்கு எதிராக இருக்கக் கூடிய சக்திகளை கட்டுக்குள் கொண்டு வர பாஜக தொண்டர்களுக்கு அரை மணி நேரம் போதும்.

ஆனால் பாஜக அமைதியை விரும்பும் கட்சி. காவல் துறையை நம்பக்கூடிய கட்சி. இதனால் தான் பாஜக நிர்வாகிகள் டி.ஜி.பி.யை சந்தித்து மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். பிரிவினைவாத சக்திகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

பெட்ரோல் குண்டு வீசி மூன்று நாட்களாகியும் ஒருவரை கூட கைது செய்ய வில்லை. கோவையில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும். இது அரசுக்கு எச்சரிக்கையாக இருக்கும். முதல்வர் காவல் துறைக்கு சுதந்திரம் அளித்து பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.