ஆன்லைன் ரம்மி மூலம் 20 லட்சத்திற்கு மேல் இழந்த இளைஞர், ஆப் மூலம் பெற்ற கடனையும் கட்ட முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள தின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான சதீஷ்குமார். இவர் திருச்சியில் உள்ள எம்.ஆர்.எஃப் டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ரித்தீஷ் என்ற 6 வயதான ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சதீஷ்குமார் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடியதில், சுமார் 20 லட்ச ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றும் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணத்தை இழந்துவந்த இவர், ஒரு கட்டத்தில் ஆன்லைன் மூலம் கடன் கொடுக்கும், 5 ஆன்லைன் ஆப்களில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெற்ற கடனை 15 லட்சம் ரூபாய் வரை அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஆன்லைன் லோன் தரும் கம்பெனி நபர்கள், வாங்கிய லோன் பணத்தை விட பல மடங்கு அதிகமாக பணம் கட்டிய பிறகும், தினமும் சதீஷ்குமாரை போனில் அழைத்து பணம் கட்ட வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பணம் செலுத்தவில்லை என்றால் உன்னிடம் தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் உன்னை கேவலமாக சித்தரித்து வெளியிடுவோம் என மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், மனைவி மற்றும் மகனை அழைத்துக் கொண்டு ஓமலூர் வந்துள்ளார். பின்னர் ஓமலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். தொடர்ந்து கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக 60 தூக்க மாத்திரைகளை வாங்கி, அதை தனது மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்வதற்கு மாத்திரையை விழுங்கியுள்ளார். இதனால், மூன்று பேரும் அறையிலேயே மயங்கி கிடந்துள்ளனர்.
இந்நிலையில் வெளியே சென்றவர்களை காணவில்லை என்று உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர். இறுதியாக ஓமலூரில் உள்ள தனியார் லாட்ஜில் தேடியபோது, மூன்று பேரும் ஒரு அறையில் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்களை மீட்டு ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சதீஷ்குமார் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ள ஓமலூர் போலீசார், தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீவட்டிபட்டு போலீசாரும், சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
